நடிகர் கமல்ஹாசனின் அறிமுகமான படமான களத்தூர் கண்ணம்மாவில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவையும், நடிகர் கமல்ஹாசனையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு அடையாளமாகவே மாறிப்போனார். இன்றைக்கு பேசுபொருளாக உள்ள பல டெக்னாலஜிகளை அன்றே பிரித்து மேய்ந்தவர். அன்றைக்கு அந்த படங்கள் சரியாக போகாத நிலையில் இன்று அந்த படங்களை பார்க்கும்போது நிஜமாகவே கமலின் சினிமா ஆர்வம் எத்தகையது என்பதை அறியலாம்.
இப்படியான நிலையில் கமல்ஹாசன் முதல் முறையாக குழந்தை நட்சத்திரமாக ஏவிஎம் நிறுவனம் தயாரித்த “களத்தூர் கண்ணம்மா” படத்தின் தான் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த தகவல். பீம்சிங் இயக்கிய இப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாடல் இன்றைக்கும் பலரின் பேவரைட் ஆக உள்ளது.
இந்நிலையில் அப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ 'உலகநாயகன்' கமல்ஹாசன் சார் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தின் படப்பிடிப்பின் போது, ஜெமினி கணேசன் சாரிடம், பக்கத்தில் நின்றிருந்த மரத்தில் ஒரு மாம்பழத்தைப் பறிக்கச் சொன்னார். அதனை கடிக்க முயன்ற பிறகுதான் கமல்ஹாசன் அது போலி மாம்பழங்கள் என்பதை உணர்ந்தார். “ஐய்யோய்யோ, டூப் மாங்கா!” என்று கத்தி விட்டு அதை தூக்கி எறிந்தார்.
அடுத்ததாக ஒரு வீட்டின் செட்டில் சுடப்படும் காட்சியை பார்த்து மீண்டும் ஒருமுறை அது நிஜம் என்று நினைத்தார். பின்னர் உண்மை தெரிந்த பிறகு "அய்யோய்யோ டூப் ஹவுஸ்!"என்று கமல் கூச்சலிட்டார். இதனைத் தொடர்ந்து ஒரு காட்சியின் போது சாவித்திரி மேடம் கமல் சாருக்கு உப்புமா ஊட்ட வேண்டும். அங்கு தான் வேடிக்கையான விஷயம் நடைபெற்றது. பலமுறை போலியான விஷயங்களைச் சந்தித்த பிறகு, உப்புமாவும் போலியானது என்று கமல் நினைத்துக் கொண்டார். அதனால் அவர் உப்புமாவை விழுங்கவில்லை. அந்த காட்சி முடிந்த நிமிடம், இது டூப் உப்மா என்று கத்தினார்.படத்தின் உதவி இயக்குனராக இருந்த எஸ்.பி.முத்துராமன் சார், அது உண்மைதான், டூப் இல்லை என்று நிரூபிக்க உப்புமாவைச் சாப்பிட்டு அமைதியானார்” என தெரிவித்துள்ளார்.