மார்வெலின் பிரமாண்ட வெற்றி:
பல்வேறு விதமான சூப்பர் ஹீரோக்களை கொண்டு உலகை காப்பற்றும் கதைக்களத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மார்வெல். கடந்த 2008ம் ஆண்டு திரைப்பட உலகில் தனது பயணத்தை தொடங்கிய அந்த நிறுவனம், இன்ஃபினிட்டி சாகா எனும் பெயரில் 20-க்கும் அதிகமான படங்களை வெளியிட்டு, அதன் உச்சகட்டமாக கடந்த 2018ம் ஆண்டு அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை வெளியிட்டது.
பிரமாண்ட பொருட்செலவில், காண்போரை மிரட்சி அடைய செய்யும் வகையிலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான அந்த திரைப்படம், உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்தது. அதன் மூலம், உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களின் வரிசையில், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் 2வது இடத்தை பிடித்தது.
மல்டிவெர்ஸ் சாகா:
இன்ஃபினிட்டி சாகாவின் அந்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது மார்வெல் நிறுவனம் மல்டிவெர்ஸ் சாகா தொடர்பான படங்களை வெளியிட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக 2025ம் ஆண்டு அவெஞ்சர்ஸ் தி காங் டைனஸ்டி மற்றும் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் ஆகிய திரைப்படங்கள் 6 மாத இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் என, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இது உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, காமிக்ஸ் கதையான சீக்ரெட் வார்ஸிற்கு, ஏற்கனவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால், அறிவிப்பு வெளியானதுமே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதேநேரம், மிகப்பெரிய கதையான சீக்ரெட் வார்ஸை ஒரே திரைப்படமாக கொடுத்தால், அதனை முழுமையாக உணர முடியாது எனவும் கருத்துகள் எழுந்தன.
சீக்ரெட் வார்ஸ் திரைப்படம்:
இந்நிலையில், சீக்ரெட் வார்ஸ் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட மார்வெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, இன்ஃபினிட்டி சாகாவில் இறந்து போன அயர்ன் மேன் மற்றும் ஓய்வு பெற்ற கேப்டன் அமெரிக்கா போன்ற கதாபாத்திரங்களும் சீக்ரெட் வார்ஸ் திரைப்படத்தில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து கதாபாத்திரங்களையும் முறையாக பயன்படுத்தி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மல்டிவெர்ஸ் சாகாவை முடிக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2 பாகங்களாக வெளியாகும் சீக்ரெட் வார்ஸ்?
இது உறுதியாகும் பட்சத்தில் ஏற்கனவே அறிவித்ததை போன்று 2025ம் ஆண்டு இல்லாமல், சீக்ரெட் வார்ஸின் முதல் பாகம் 2026ம் ஆண்டு வெளியாகக் கூடும். அதைதொடர்ந்து சில மாத இடைவெளியிலேயே அதன் இரண்டாம் பாகமாக அவெஞ்சர்ஸ் எடெர்னிட்டி வார் என்ற திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி, காங் டைனஸ்டி திரைப்படத்தில் தானோஸ் மாதிரியான மற்றொரு வில்லனான காங் வெற்றி பெறுவார்.
அதன் பிறகு மீதமுள்ள பல்வேறு உலகங்களை சேர்ந்த சூப்பர் ஹீரோக்களும் ஒன்றிணைந்து, எப்படி காங்கை வீழ்த்தினர் என்பது இரண்டு பாகங்களாக விளக்கப்பட உள்ளது. அப்படி இல்லாத பட்சத்தில், 4 மணி நேர முழு நீள ஒரே திரைப்படமாக சீக்ரெட் வார்ஸ் திரைப்படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.