புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து 8 மாதங்கள் ஆகியும் சீருடை வழங்காததை  கண்டித்து, பள்ளி சீருடையுடன் சைக்கிளில் வந்து சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிய நிலையில் அது குறித்து பேரவையில் பேச மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

Continues below advertisement

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால், புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது, சபாநாயகர்  செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார். முதலாவதாக சபையில் மறைந்த ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும் nமாநில அந்தஸ்து விவாகரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பேரவையில் தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா வலியுறுத்தினார். தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கண்டன முழக்கங்களை எழுப்பிய நிலையில், இது குறித்து பேரவையில் பேச மறுத்ததாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத அரசை கண்டித்தும் பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Continues below advertisement

இதனிடையே அரசின் கூடுதல் செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் பேரவையை கால வரையின்றி ஒத்தி வைத்து அறிவித்தார் சபாநாயகர் செல்வம். பேரவை தொடங்கி 25 நிமிடத்தில் பேரவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 8 மாதங்கள் ஆகியும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வரை சீரடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்காகததை கண்டித்தும், உடனடியாக சீருடை, புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை  அரசு வழங்கிட வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பள்ளி சீருடை அணிந்து, அடையாள அட்டையுடன் பையை மாட்டிக் கொண்டு சைக்கிளில் சட்டப்பேரவை வந்தனர். தொடர்ந்து சீருடை மற்றும் பையை மாட்டிக் கொண்டு சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்பதற்காக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் பேரவை நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா, பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக சீருடை வழங்க வேண்டும் என்றும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற திமுக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் குரல்கொடுக்க, கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.