Avengers DoomsDay Cast: அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் லோகி கதாபாத்திரம் இடம்பெறுவதும், புதிய பிளாக் பாந்தர் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே:
சூப்பர் ஹீரோக்கள் சார்ந்த திரைப்படங்கள் மூலம் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை மார்வெல் நிறுவனம் கொண்டுள்ளது. உலகளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில், பல இந்த நிறுவனத்தின் வசமே உள்ளன. இந்நிலையில் தான் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் இடம்பெற உள்ள கதாபாத்திரங்களை மார்வெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) ஏற்கனவே அறிமுகமான பல நட்சத்திரங்களுடன், புதிய கதாபாத்திரங்களில் நடிகர்களும், பழைய எக்ஸ்-மேன் படத்தில் இடம்பெற்றவர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வைரல் வீடியோ
மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், அடுத்த ஆண்டு மே 1ம் தேதி வெளியாக உள்ள அவெஞ்சர்ஸ்:டூம்ஸ்டே படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் பெயர்கள் அடங்கிய நாற்காலிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதன் இறுதியில் அயர்ன்மேன் ஆக நடித்து பெரும் வரவேற்பை பெற்றதோடு, இந்த படத்தில் முக்கிய வில்லனான டாக்டர் டூம் ஆக நடிப்பது குறிப்பிடத்தக்கது. அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் எண்ட்கேம் ஆகிய பிரமாண்ட படங்களை இயக்கிய, ருஸ்ஸோ பிரதர்ஸ் தான் டூம்ஸ்டே படத்தை இயக்குகிறார்கள். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படம், முந்தைய அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை காட்டிலும் ஏராளமான சூப்பர் ஹீரோக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
நட்சத்திர பட்டாளம்
வெளியாகியுள்ள வீடியோவின்படி, “ கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (தோர்), அந்தோணி மேக்கி (கேப்டன் அமெரிக்கா), செபாஸ்டியன் ஸ்டான் (தி வின்டர் சோல்ஜர்), பால் ரூட் (ஆண்ட்-மேன்), டாம் ஹிடில்ஸ்டன் (லோகி), லெட்டிடியா ரைட் (பிளாக் பாந்தர்), வயட் ரஸ்ஸல் (அமெரிக்கன் ஏஜெண்ட்), சிமு லியு (ஷாங்-சி), ஃப்ளோரன்ஸ் பக் (யெலினா பெலோவா) ஆகியோருடன், ஜேம்ஸ் மார்ஸ்டன் (சைக்ளோப்ஸ்), இயன் மெக்கெல்லன் (மேக்னெட்டோ), பேட்ரிக் ஸ்டீவர்ட் (புரொபசர் எக்ஸ்), ரெபேக்கா ரோமிஜின் (மிஸ்டிக்) மற்றும் சானிங் டாட்டம் (காம்பிட்) போன்ற எக்ஸ்-மென் கதாபாத்திரங்களும் டூம்ஸ்டே படத்தில் இடம்பெற உள்ளன. கூடுதலாக கூடுதலாக, தண்டர்போல்ட்ஸ் படத்தில் அறிமுகமாக உள்ள லூயிஸ் புல்மேன் (பாப் / சென்ட்ரி) மற்றும் டேனி ராமிரெஸ் (பால்கன்) ஆகியோரும் படத்தில் இணையலாம். குறிப்பாக பழைய கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்த, க்றிஸ் இவான்ஸ் இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தை தொடர்ந்து, 2027ம் ஆண்டு மே 7ம் தேதி சீக்ரெட் வார்ஸ் படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பும் அடுத்தடுத்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெளியாகியுள்ள நடிகர்கள் தொடர்பான அறிவிப்பு,படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.