இந்தியாவில் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதுகுறித்து வெளியாகியுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் “அவதார்” படம் வெளியானது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளை உள்ளடக்கிய இந்திய திரையுலகில் ஹாலிவுட் படங்கள் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதானாலேயே தங்கள் மொழியில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு கொடுக்கும் வரவேற்பை ஹாலிவுட் படங்களுக்கும் ரசிகர்கள் கொடுக்கின்றனர்.
அந்த வகையில் அவதார் படத்தின் முதல் பாகம் தான் உலகளவில் அதிகமான வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை பெற்றது. கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது.
இதனிடையே அவதார் படம் 5 பாகங்களாக 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் டிசம்பர் 16 ஆம் தேதி இப்படத்தின் 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர்கள் கடந்த நவம்பர் 2 மற்றும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியானது.
இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே ஏறக்குறைய 2 லட்சம் டிக்கெட்டுகளை விற்று தீர்ந்தது. தொடக்க வார இறுதியில், அதாவது டிசம்பர் 16 முதல் 18 ஆம் தேதி வரை அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்திற்கு சுமார் 4.10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதன்மூலம் ரூ.16 கோடி வசூலாகியுள்ளது. சென்னையில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.100ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.