பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திரமுகி-2 படத்தில் சந்திரமுகியாக யார் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


 கடந்த 2005 ஆம் ஆண்டு  நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில்  வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டதட்ட 800 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார். 






2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி  சந்திரமுகி-2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது.


பாகுபலி படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.  மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் சந்திரமுகியாக நடிக்கப் போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்தது. முதல் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகா அசத்தியிருப்பார். சொல்லப்போனால் ரஜினியை விட இந்த கேரக்டர் தான் அதிகம் பேசப்பட்டது.






 இந்நிலையில் சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிகை கங்கனா ரணாவத் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தான் சந்திரமுகியாக இருப்பார் எனவும் கூறப்படுவதால் ஜோதிகாவின் நடிப்பை மிஞ்சும் வகையில் கங்கனா அசத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.