கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கனவுப்படமான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ’தி வே ஆஃப் வாட்டர்’ உலகம் முழுதுமுள்ள திரையரங்குகளில் வெளியானது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகமான அவதார் தொழில்நுட்பத்தில் மிரட்டி உலக அளவில் சக்கைபோடு போட்டு வசூல் வேட்டை நடத்தியது. மேலும் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளையும் வென்றது.
அதனைத் தொடர்ந்து இன்னும் மிக பிரம்மாண்டமாய், பெரும் பொருட்செலவு, தொழில்நுட்ப வசதிகள் என அதிக காலம் எடுத்து அடுத்த தளத்துக்கு படத்தை எடுத்துச் சென்று சுமார் 13 ஆண்டுகள் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழுவினர் பார்த்து பார்த்து செதுக்கி வந்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 16 வெளியான ’தி வே ஆஃப் வாட்டர்’ முதல் வாரத்தில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பண்டோரா உலகின் மக்களுக்கு தன்னால் ஆபத்து நேருகிறது என்பதை அறியும் ஹீரோ ஜேக் சல்லி, குடும்பத்தினரோடு கடல்வாசிகள் வாழும் பண்டோரா உலகத்தில் தஞ்சமடைகிறார். அவரை வில்லனான கர்னல் எப்படி பழிவாங்க முற்படுகிறார் என்பதே 2 ஆம் பாகத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவதார் 2 குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர்கள் (16,400 கோடி ரூபாய்!) வசூலித்தால் தான் நஷ்டம் ஏற்படாமல் தப்பித்து படத்துக்கான செலவை ஈடுகட்ட முடியும் என இயக்குநர் ஜேம்ஸ் காமரூன் தெரிவித்திருந்தார்.
இச்சூழலில் தொடக்கத்தில் சுமாராகவே தொடங்கிய அவதார் படத்தின் வசூல் மெல்ல மெல்ல அதிகரித்து சென்ற வார மத்தியில் சூடுபிடித்தது. இந்நிலையில் அவதார் ’தி வே ஆஃப் வாட்டர்’ உலகம் முழுவதும் ஒரு கோடி பில்லியன் அதாவது 8200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வட அமெரிக்காவில் மட்டும் 700 மில்லியன் டாலர்களும், பிற உலக நாடுகளில் 300 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெளியான ’டாக்டர் ஸ்ட்ரேஞ்: இன் த மல்ட்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ படம் 943 மில்லியன் டாலர்கள் வசூலை வாரிக்குவித்தது. அதனைத் தொடர்ந்து வெளியான டாம் க்ரூஸின் ’டாப் கன் மேவரிக்’ படம் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது அவதார் தி வே ஆஃப் வாட்டர் படம் ஒரு பில்லியன் டாலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.