விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூர் பகுதி உள்ளது. இங்கு புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலக்கபிரிவு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். மேலும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான வழக்குகளை பதிவு செய்யும் இ-செலான் கருவி மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் இரவு 11.30 மணி அளவில் கிளியனூர் காவலர்கள் திருஞானம், கார்த்தி ஆகியோர் சோதனை சாவடியில் பணியில் இருந்தனர்.


அப்போது, போக்குவரத்து விதி மீறியவர்களிடம் இ-செலான் கருவி மூலம் அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு இருசக்கர வாகனம் வேகமாக வந்தது. அதில் வந்த 2 பேரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதை பார்த்த காவலர்கள், இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். உடனே இருசக்கர வங்கத்தை ஓட்டி வந்த நபர், வாகனத்தின் வேகத்தை குறைத்து சாலையோரத்தில் நிறுத்துவது போன்று வந்தார். அப்போது அவர்கள், திடீரென திருஞானம் கையில் வைத்திருந்த இ-செலான் கருவியை பறித்துக்கொண்டு வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.


இதனால் காவலர்கள் இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துபோய் நின்றனர். இது பற்றி அவா்கள், தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அடுத்தடுத்த காவல் நிலையங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஆனால் இ-செலான் கருவியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் சிக்கவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் 2 மர்மநபர்கள், இ-செலான் கருவியை பறித்த காட்சி பதிவாகி இருந்தது. இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால், அந்த இருசக்கர வாகன பதிவெண் தெளிவாக தெரிந்தது. அந்த எண்ணை வைத்து அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.


அதனடிப்படையில் கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையி லான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் உள்ள சீர்பாத நல்லூர் ஏழுமலை மகன் சதீஷ் (வயது 22), திரு வண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடி ரங்கநாதன் மகன் சந்தோஷ் (20) ஆகி யோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவ்விருவரையும் கைது செய்த போலீசார் அவர்க ளிடம் விசாரணை நடத்தி னர். அதில் 2 பேரும் புதுச்சேரியை சுற்றிப் பார்த்து விட்டு, மது அருந்தி வீடு திரும்பியதாகவும், போலீசாரிடம் மாட்டிக் கொண்டால் பைன் போடு வார்கள் என்ற பயத்தில் இ.சலான் மெஷினை பிடிங்கி சென்றதாகவும் தெரிவித்தனர். மேலும், அந்த மெஷி னை கொந்தாமூர் மேம்பா லத்தின் அடியில் ஒளித்து வைத்துள்ளதாகவும் கூறினர். அங்கு சென்ற போலீசார் இ-சலான் மெஷினை கைப்பற்றினர். வானூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.