நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு, எஸ்டேட்டுக்கு உள்நுழைந்த மர்ம கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் சென்று அங்குள்ள அறைகளை உடைத்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டதை காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்தனர். அச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார்.
மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயான், அவரது மனைவி, மகளுடன் கேரளாவில் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். சயான் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதைத் தொடர்ந்து சயான் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.
தற்போது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கினை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தோஷ் குமார் திடீரென கொடநாடு வழக்கு விசாரணை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தனிப்படையில் சேர்க்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சேலம் மாநகர சைபர் கிரைமில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மற்றும் சில காவலர்கள் கொடநாடு வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு இவர்களும் விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர சைபர் க்ரைம் பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தமிழகம் முழுதும் தேர்வு செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கொடநாடு பகுதியில் உள்ள செல்போன் டவரில் கொலை சம்பவம் நடந்த அன்று யார் யாரிடம் பேசி உள்ளானர் என தற்போது விசாரணை தொடங்கி உள்ளது. இது மட்டுமின்றி சேலம் மாவட்டம் ஆத்தூரில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் செல்போனில் யாரிடம் பேசியுள்ளார், யாரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது குறித்தும் சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை 90 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள இந்த வழக்கு விசாரணையில் சிபிசிஐடி காவல் துறையினர் ஒரு பிரிவாகவும், சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றொரு பிரிவாகவும் விசாரணையை நடத்தி வருகின்றனர். இதனால் கொடநாடு கொலை வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.