இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


டெர்மினேட்டர், டைட்டானிக் உட்பட தனது படங்கள் மூலம் ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்கிய அவதார் திரைப்படம் உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றது. 


மதிப்புமிக்க கனிமமான யூனோப்டானியத்தை வெட்ட வேற்று கிரகம் ஒன்றான பண்டோராவை மனித இனம் கைப்பற்றுவதே இப்படத்தை அடிப்படை கதையாகும். அங்கு  “நவி” என்ற இனத்தினர் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இதற்காக மனிதர் ஒருவனை நவி இனத்தின் ஆளாக மாற்றி அனுப்பப்படுகிறான். அங்கு செல்லும் அவன் நிலைமையை உணர்ந்து பண்டோரா உலகத்தை காப்பாற்றப் போராடுவது மீதி கதையாகும். 






கிராபிக்ஸ் காட்சிகள் இவை என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் 5 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 22 ஆம் தேதியும், 3 ஆம் பாகம் 2024 ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியும், 4 ஆம் பாகம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியும், 4 ஆம் பாகம் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இந்தாண்டு வெளியாகும் 2 ஆம் பாகத்திற்கு  அவதார்: தி வே ஆப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் இம்முறை கடலில் வாழும் உயிரினங்களையும், கனிம வளங்களையும் பாதுகாக்கும் நவி இன மக்கள் குறித்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. 


கிட்டதட்ட முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் நிச்சயம் இதன் காட்சிகளை, கதையமைப்புகளை மறந்திருக்க கூடும் என்பதால் 2 ஆம் பாகத்துடன் அவர்கள் தொடர்பில் இருக்கும் வகையில் அவதார் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 4K தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள அவதார் படம் செப்டம்பர் 23 ஆம் தேதி ரிலீசாகும் என்று புதிய போஸ்டரோடு அறிவிப்பை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டுள்ளார்.