காதலை மறுத்த 19 வயது இளம் பெண் மீது வெறிபிடித்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. 


நடந்தது என்ன?


ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் என்ற இளைஞர் அடிக்கடி தொந்தரவு கொடுத்துவந்துள்ளார். கட்டுமானப் பணியாளராக இருக்கும் ஷாருக் அப்பெண் பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துள்ளார். தன்னிடம் பேச வேண்டும் பழக வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளார்.


10 நாட்களுக்கு முன்னர் ஷாருக் அப்பெண்ணின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து தொந்தரவு செய்துள்ளார். இதனால் அப்பெண் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். கடைசியாக நேற்று ஆகஸ்ட் 22 இரவு 8 மணியளவில் அப்பெண்ணுக்கு ஷாருக், என்னுடன் பேசாமல் இருப்பதால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அப்பெண், உடனடியாக தனது தந்தையிடம் இத்தனை நாட்களாக தான் அனுபவித்து வந்த வேதனையைப் பற்றி தெரிவித்திருக்கிறார்.


உடனே அவரது தந்தை மகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் கவலைப்பட வேண்டாம் நாளை அந்தப் பையனின் பெற்றோரை சந்தித்துப் பேசுகிறேன் என்றும் கூறியுள்ளார்.


இந்நிலையில் காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அப்பெண் திடீரென உடலில் வலியும் எரிச்சலும் மிகுவதை உணர்ந்து கண்விழித்தார். அப்போதுதான் அவர் மீது தீப்பற்றி எறிவது அவருக்குத் தெரிந்தது. அதனால் அவர் அதிர்ந்து போய் வேதனையில் அலறிக் கொண்டே தந்தையின் அறையை நோக்கி ஓடினார். மகள் எரிந்து கொண்டே வருவதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.




சம்பந்தப்பட்ட இளைஞர் ஷாருக்கை கைது செய்துள்ளதாக காவல் நிலைய பொறுப்பாளர் நிதிஷ் குமார் கூறினார். இப்போது அப்பெண் 90% காயங்களுடன் பூலோ ஜானோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த சம்பவம் தும்கா மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ஒருதலையாக காதலிப்பது. காதல் என்றுகூட சொல்லக் கூடாது பெண்ணின் மீது வெறி கொண்டு அவள் விருப்பம் இல்லாவிட்டாலும் அவளைப் பின் தொடர்வது. அந்தப் பெண் ஏற்க மறுத்தால் அவள் மீது ஆசிட் வீசுவது, தீ வைப்பது, கத்தியால் குத்திக் கொல்வது என்று பல்வேறு கொடூரங்கள் இந்தியாவில் நடைபெறுவது தொடர்கதையாகிவிட்டது.


தமிழகத்தில் ஆசிட் வீச்சுக்கு பலியான வினோதினி, கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்வாதி என நிறைய சம்பவங்களை நாம் பார்த்துவிட்டோம்.


பாலின சமத்துவத்தை வீட்டிலிருந்தே ஆண் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கும் காலம் வரும் வரை இதுபோன்ற குற்றங்கள் ஓயப்போவதில்லை.