சிறுத்தை படம் மூலம் தமிழ் சினிமாவில் பக்கா கமர்ஷியல் இயக்குனர் என்கிற அந்தஸ்தில் இருந்த இயக்குனர் சிவா)ம், தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் என அழைக்கப்படும் அஜித்குமாரும் 2004ல் வீரம் படம் மூலம் இணைந்தார்கள். வீரம் சூப்பர் டூப்பர் ஹிட். நீண்ட நாட்களுக்குப் பின் அஜித் பெற்ற அசுர வெற்றி என்று கூட சொல்லலாம்.
வசூல் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வீரம் தந்த ஊக்கம், மீண்டும் சிவா-அஜித் கூட்டணியை இணைத்தது. அப்போது, அஜித் வைத்திருந்த பார்முலா இது தான். தனக்கு ஒரு ஹிட் படம் கொடுத்தால், அடுத்த படத்தின் வாய்ப்பை அதே இயக்குனருக்கு வழங்குவது தான் அது. இதனால் இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பும், கடமையும் அதிகம் வரும் என நம்பினார் அஜித்.
அந்த வகையில், மீண்டும் 2015ல் அஜித்-சிவா கூட்டணி வேதாளம் என்கிற படத்தை வெளியிட்டனர். வீரம் செய்த ரெக்கார்டை எல்லாம் முறியடித்து, தமிழ் சினிமாவில் பேசும் பொருளானது வேதாளம். மாறுபட்டி கதாபாத்திரத்தில் அஜித் ஆர்ப்பரித்திருந்த அந்த படம், வாலி படத்திற்குப் பின் அவருக்கு பெயரை பெற்றுத்தந்தது. வீரம், வேதாளத்தை தொடர்ந்து அஜிதத்-சிவா கூட்டணி அசைக்க முடியாத ஹிட் கூட்டணி என்று பேசப்பட்டது. அதற்கு முன் அஜித்-சரண் கூட்டணி தான் அவ்வாறு பேசப்பட்டது. அதை சிவா, தன் வசமாக்கினார்.
இரண்டு ஹிட் கொடுத்ததால், மீண்டும் தனது அடுத்த படத்திற்கான வாய்ப்பை சிவாவிடம் வழங்கினர் அஜித். இருவரும் இணைந்த அந்த படத்திற்கு விவேகம் என பெயரிடப்பட்டது. வீரம், வேதாளம், விவேகம் என தனது படங்களுக்கு ‛V’ சென்டிமெண்ட் வைக்கத் தொடங்கினார் அஜித். தீவிர சாய்பாபா பக்தர்களான அஜித் மற்றும் சிவா இருவருமே, வியாழக்கிழமை ரிலீஸ், வி சென்டிமெண்ட் என தங்கள் படைப்பில் ஒரே மாதிரியான நடைமுறை தொடர்ந்தனர். வீரம், வேதாளம் வெற்றியைத் தொடர்ந்து, விவேகம் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது. சத்யஜோதி ப்லிம்ஸ் தயாரித்த இந்த படம், பெரிய அளவில் விற்பனையும் ஆனது.
அஜித் இதுவரை இல்லாத அளவிற்கு மெனக்கெட்டு உடலை வலுவாக்கி, 6 பேக்ஸ் எல்லாம் முயற்சி செய்து, தன்னை ஹாலிவுட் ஹீரோ போல மாற்றியிருந்தார். கதைக்களம் முழுக்க ஐரோப்பிய நாடுகளில் தான் படமாக்கப்பட்டது. வீரம் படத்திற்கு டிஎஸ்பி இசையமைத்திருந்த நிலையில், வேதாளத்தில் அனிருத் உள்ளே வந்தார். விவேகத்திலும் அவர் தொடர்ந்தார். முதன் முதலில் தமிழ் படத்தில் ஆங்கிலப்பாடல் இருந்தது, விவேகத்தில் தான் . இதன் மூலம், இது ஒரு ஹாலிவுட் தரமான படம் என்கிற சேதியை அஜித்தும், சிவாவும் கூற வந்தனர்.
ஆகஸ்ட் 24 ம்தேதி இதே நாளில் , 2017 ல் வெளியானது விவேகம். எப்போதுமே அஜித் திரைப்படம் ரிலீஸ் ஆனால், அன்றைய ஓப்பனிங் படுபயங்கரமாக இருக்கும். விவேகம் படமும் அப்படியான ஓப்பனிங்கை பெற்றது. ஆனால், அதன் பின் மோசமான விமர்சனங்களை பெற்றது விவேகம். வியாபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கையை கடிக்கவில்லை என்றாலும், கதை ரீதியாக கடுமையான விமர்சனத்தை சந்தித்தது விவேகம்.
அஜித் தன்னை சூப்பர் ஹீரோவாக காட்டிக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சி என சாடினார்கள். இயக்குனர் சிவா மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அஜித் ரசிகர்களே ‛போதும் சிவா... தலயை விட்டுடுங்க...’ என்று போஸ்ட் போடும் அளவிற்கு அவர்களது கூட்டணி விமர்சிக்கப்பட்டது.
உண்மையில் விவேகம், அஜித் எதிர்பார்த்தது ஒன்று; நடந்தது மற்றொன்று. வசூல் என்பதை கடந்து, தங்கள் முயற்சிகள் பேசப்படவில்லை; மாறாக விமர்சிக்கப்பட்டதை இருவரும் புரிந்து கொண்டார்கள். அதிலும், விவேகம் கதையில் அஜித் தலையீடு அதிகம் இருந்தது. அதனால், தனது தவறை அவர் ஏற்றுக் கொண்டு, மீண்டும் வாய்ப்பை சிவாவுக்கு வழங்கினார். அது தான், பிந்நாளில் வெளியான விஸ்வாசம். ‛வெற்றியோடு இணைந்தோம்... வெற்றியோடு விலகுவோம்’ என்று சிவா-அஜித் பரஸ்பரம் பேசி, விஸ்வாசம் என்கிற வெற்றி படத்தை கொடுத்து, அவர்கள் மாற்று இடத்திற்கு நகர்ந்தனர்.
இந்த முடிவுக்கு காரணமான படம், விவேகம். இன்றோடு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. காஜல் அகர்வால், விவேக் ஓபுராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருந்த விவேகம், திரைக்கதையின் வேகத்தால் விமர்சிக்கப்பட்ட திரைப்படம்.