மலேசியாவில் முட்டைத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு முதன்முறையாக முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


நாமக்கலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ள நிலையில், தமிழ்நாடு தாண்டி வெளி மாநிலங்கள், வெளிநாடு என மாதத்துக்கு கோடிக்கணக்கான முட்டைகள் நாள்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில் முன்னதாக மலேசியாவுக்கு முதன்முதலாக முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.


மலேசியாவில் நிலவி வரும் முட்டைத் தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் மலேசிய விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.


அமைச்சரின் இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், மலேசியாவில் முட்டைத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.


இதையடுத்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மற்றும் விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவைகள் (AQCS) சான்றிதழ் செயல்முறையை விரைவுபடுத்தி, நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு முதன்முறையாக முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது.


 






இதன்படி, திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில் அனுப்பப்பட்டு இன்று காலை (டிசம்பர்.15) காலை மலேசியாவில் தரையிறங்கியது.


இந்த முட்டைகள் மலேசியாவில் சோதனைக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டலத் தலைவர் ஷோபனா குமார் தெரிவித்துள்ளார். 


முன்னதாக இதேபோல் நாமக்கலில் இருந்து உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ஒட்டி கத்தாருக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.


ஏற்கெனவே கத்தாருக்கு மாதம் தோறும் 50 லட்சம் வரை முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், சென்ற ஒரு மாதத்தில் மூன்று மடங்காக அதிகரித்து மாதத்துக்கு 1.5 கோடி வரை முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.