நடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் அறிமுக காட்சி குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.


தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள ராம்சரணின் நடிப்பில் கடைசியாக ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடித்திருந்த நிலையில் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்த ஆர்.ஆர்.ஆர். ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டியிடுகிறது. 


இதனிடையே தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் ஷங்கர் தற்போது தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கிறார். ’ஆர்சி15’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள தமன் இசையமைத்துள்ள நிலையில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, நாசர், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.  விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்து வரும் தில் ராஜூவின் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் 50வது படமாக இது உருவாகி வருகிறது. 






ரூ.170 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘புஷ்பா’ படத்தை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இந்த கூட்டணி 2018 ஆம் ஆண்டு ரங்கஸ்தலம் படத்தில் இணைந்த நிலையில் அப்படம் மிகப்பெரிய வெற்றையை பெற்றது. இப்படத்தின் ராம் சரணின் பத்து நிமிட ஆரம்ப காட்சியை ஏற்கனவே சுகுமார் படமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. RRR ரிலீஸுக்கு முன்பே இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. 


ஆனால் புஷ்பா படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதால் அதன் 2 பாகத்தை எடுக்கும் பணியில்  சுகுமார் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனால் ராம்சரண் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகுமார் படத்தில் எடுக்கப்பட்ட ராம்சரண் காட்சி எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் மிகவும் கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டு இருக்கும் அந்த காட்சியை பார்க்கும் போது பார்வையாளர்கள் தங்கள் இருக்கைகளில் நடுங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.