இயக்குநர் அட்லீ தனது பிறந்தநாள் ஸ்பெஷல் படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நடுவில் நிற்க ஒருபுறம் விஜய்யும், மறுபுறம் ஷாருக்கானும் நிற்கின்றனர். அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அட்லீ, இதைவிட நான் எனது பிறந்தநாளில் வேறென்ன கேட்க முடியும். இவர்கள் தான் என் வாழ்வின் தூண்கள். எனது அன்புக்குரிய ஷாருக்கான். என்னோட அண்ணே தளபதி என்று பதிவிட்டுள்ளார்.
அட்லீ விஜய் உறவு:
இயக்குநர் அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஹிந்தி படம் ஒன்றை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு விஜய் பட வேலைகளை அட்லீ தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யும் அட்லீயும் நான்காவது முறையாக இணைவதால் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அட்லீ பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம் விஜய் ரசிகர்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட்டில் கலக்குவாரா அட்லீ:
நம்மூரில் வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய், சூர்யாவுக்கு மெகா ஹிட் படங்களைத் தந்தவர். அவர் பாலிவுட் பக்கம் சென்றார். அமீர்கானை வைத்து படம் செய்தார். அதுபோலத்தான் நம்மூரில் விஜய்யை வைத்து மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்களைக் கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், நிறுவன தயாரிப்பில் பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் திரைப்படம் “ஜவான்”. இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நயன் தாரா ஏற்கெனவே அட்லியின் ராஜா ராணி, தெறி உள்ளிட்ட படங்களில்ள்ள நிலையில், தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில், ஷாருக்கானுடன் ஜவான் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ராஜா ராணி முதல் பிகில் வரை:
அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி (2013)" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . பின்னர் இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். அதன் பின்னர் மெர்சல், பிகில் படங்கள் வந்தன.