அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது ரூ.80.86 என்ற அளவில் குறைந்து சரிவை சந்தித்துள்ளது.


வட்டியை உயர்த்திய அமெரிக்க வங்கி:


கடந்த சில ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக உலக முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அதையடுத்து ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்தது. இந்த தாக்கமானது உலக முழுவதையும் பாதித்து பணவீக்கத்தை ஏற்படுத்தியது.




இந்நிலையில் அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க பெடரல் வங்கியானது, வட்டி விகிதத்தை அதிகரித்தது. இந்த வட்டி உயர்வால் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், பங்குச் சந்தைகளில் இருந்து வெளியே செல்ல ஆரம்பித்தனர். இதனால் டாலர் பணம் இந்தியாவிலிருந்து வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், இந்தியாவில் டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. அதையடுத்து டாலருக்கான மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்தன. 


சரிவில் பங்குச் சந்தை:


வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். அதன் காரணமாக இன்றைய பங்குச்சந்தை வர்த்தகமானது சரிவுடன் தொடங்கி, முடிவிலும் சரிவுடன் முடிவடைந்தது.


 




மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், 337. 06 புள்ளிகள் குறைந்து 59,119 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, 88.55 புள்ளிகள் குறைந்து 17, 629.80 ஆக உள்ளது. 




ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:


நேற்றைய தினம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.79.97 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று மேலும் அதிகரித்து ரூ. 80.95ஆக உள்ளது.