ஷூட்டிங் ஸ்பாட்டில் இளம் இயக்குநர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக நடிகர் ஷாந்தனு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


நடிகர் பாக்யராஜின் மகனும், நடிகருமான ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நேற்றிரவு ஒரு அன்பான நண்பரை இழந்தேன். 26 வயதான ஆர்வமுள்ள, மிகவும் திறமையான உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால் கடவுள் அவரை சீக்கிரம் அழைத்துச் சென்று விட்டார். அவர் வேலையின் போது இறந்துவிட்டார். 






வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றது. வாழ்க்கை மிகவும் அநியாயம் செய்தது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்கு ஒரு கால அவகாசம் கூட வழங்கப்படவில்லை. சில நிமிடங்களில் உயிரிழந்து விட்டார். மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் இறப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு என்னை அழைத்திருந்தார். ஆனால் என்னால் அதை எடுக்க முடியவில்லை... நான் அவனுடைய போனை  எடுத்திருக்க வேண்டும். 






நம் வாழ்வின் அடுத்த நொடி நிச்சயமற்றது என்பதால் நாம் அனைவரும் ஈகோ, வெறுப்பு மறந்து மறந்து  மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம். யாரிடமாவது வெறுப்பை வீசுவதை விட புன்னகைப்போம்” என சாந்தனு தெரிவித்துள்ளார். 


மேலும், “மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிப்போம். இன்றைய உலகின் மிகப்பெரிய குற்றவாளி ம்ன அழுத்தம் தான். நீங்கள் ஏதாவது ஒரு வழியாகப் போகிறீர்கள் என்றால் யாரிடமாவது மனம் விட்டு பேசுங்கள். அந்த வலி மற்றும் மன அழுத்தத்தை நீங்களே தனியாக சரிசெய்து கொள்ள எண்ணாதீர்கள்.  அது உங்களை விழுங்கும்” எனவும் சாந்தனு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 






தொடரும் உயிரிழப்புகள் 


நேற்றைய தினம் தெலுங்கு திரையுலகில் வளரும் இளம் நடிகரான சுதீப் வர்மா பட வாய்ப்பு இல்லாததால் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து நேற்று இரவு தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமைகளை கொண்ட இ.ராமதாஸ் மாரடைப்பால் காலமானார். திரையுலகில் அடுத்தடுத்து உயிரிழப்பு தகவல்கள்  ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.