நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சினிமாவில் ரிஸ்க் எடுப்பது பற்றி இதுவரை ஃபீல் பண்ணவில்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ரன் பேபி ரன்”. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மண் குமார் மற்றும் வெங்கட் இப்படத்தை தயாரித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ரன் பேபி ரன் பிப்ரவரி 3 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு ஊடக நேர்காணல்களில் ஆர்.ஜே.பாலாஜி பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றியும், நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்வேன் உட்பட பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
ஆணவத்தை உடைத்த பணிப்பெண்
என் ஏரியாவுல இருக்குற அக்கா காலை 3 வீட்டுலையும், சாயங்காலம் 2 வீட்டுலையும் வேலை பார்ப்பாங்க. 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் அவர் மாதம் ஒருமுறை குழந்தைகளுடன் தியேட்டர் சென்று படம் பார்ப்பார்கள். அவருக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். என் ஆபீஸ் பக்கம் போகும் போது அவங்க என்னிடம் சினிமா பத்தி பேசுவாங்க. அப்படி இருக்கையில், ஒருநாள் “ஓடிபாபா” பெயர் வச்சா படம் பார்ப்பீங்களா என கேட்டேன்.
”அந்த பெயர் ரசிகர்களிடத்தில் பிரபலமானது என்பதால் நான் அதனைத் தான் டைட்டிலாக முடிவு செய்தேன். ஆனால் அப்படின்னா என்ன என கேட்டு அந்த அக்கா என் ஆணவத்தை ஒரே நிமிடத்தில் உடைத்தார். அப்புறம் ‘மூக்குத்தி அம்மன்’ டைட்டில் எப்படி இருக்குன்னு கேட்டேன். சூப்பரா இருக்கு..சாமி படமான்னு கேட்டாங்க. என்னோட டீம் எல்லோரும் இந்த டைட்டில் தான் வேணும்ன்னு சொன்னாங்க. நான் மட்டும் தான் ஓடிபாபா வைக்கலாம்ன்னு இருந்தேன். அப்பப்ப அந்த அக்காகிட்ட பேசுவேன். அப்படித்தான் ரன் பேபி ரன் படத்தின் போஸ்டர் பார்த்துட்டு என்ன அது ரன் அப்படின்னு கேட்டாங்க. படம் வந்ததும் சொல்றேன்னு சொன்னேன்” என தன்னுடைய படத்தில் ஏரியாவில் வேலை பார்க்கும் அக்காவின் பங்கு குறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
புது ஹீரோயின்ஸ் கூட நடிக்காததற்கு காரணம்
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படத்தில் இதுவரை நயன்தாரா, அபர்ணா பாலமுரளி, தற்போது ரன் பேபி ரன் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் என முன்னணி ஹீரோயின்கள் நடித்திருக்கின்றனர். ஏன் அவர் புதுமுக ஹீரோயின்களுடன் நடிப்பதில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். “நான் எடுக்கிற படம்ன்னா அதில் கேரக்டர்களை தேர்வு செய்வதில் நான் கவனமா இருப்பேன். ரன் பேபி ரன் படம் இயக்குநரின் விருப்பம் என்பதால் நான் தலையிடவில்லை.
என் கருத்தை தெரிவிக்கும் வகையில் ஜார்ஜ் மரியம் மற்றும் குக் வித் கோமாளி பாலா இருவருக்கும் கேரக்டர் இருந்தா கொடுங்க மட்டுமே சொன்னேன் என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
சினிமாவுக்கு வராவிட்டால்...
“சினிமாவுக்கு வரவில்லை என்றால் என்ன பண்ணிருப்பேன் என்றால் கடை வைத்திருப்பேன், இல்லையென்றால் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒரு 10 சீசனுக்கு நடுவராக பணியாற்றிருப்பேன். நான் என்னோட பலமாக கிரியேட்டிவிட்டி, ஹியூமர் இந்த இரண்டை தான் நினைக்கிறேன். இதுவரைக்கும் ரிஸ்க் எடுக்கிறன்னு ஃபீல் பண்ணது இல்ல. ஆர்.ஜே.பாலாஜி இவ்வளவு தானா என நினைப்பதற்குள் நாம அந்த எண்ணத்தை மாத்திடணும். காமெடி கேரக்டர்ல வருஷத்துக்கு 10,15 படம் வரும். அதுல நல்ல பணம் வரும். உன்ன ஹீரோவா வச்சு யாரு படம் எடுப்பாங்கன்னு கேட்டாங்க. யாரும் எடுக்கலைன்னா நானே எடுத்துட்டு போறேன் என கதை எழுதுனேன்” என அந்த நேர்காணலில் ஆர்.ஜே.பாலாகி பல தகவல்களை தெரிவித்துள்ளார்.