மதுரை தத்தனேரி திரு.வி.க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹெச்.டி.எப்.சி வங்கி பங்களிப்பில் 5 மாநகராட்சி பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை நவீன முறையில் மாற்றியமைக்கும் பணிகளை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங், மேயர் இந்திராணி, ஹெச்.டி.எப்.சி வங்கி நிர்வாக இயக்குநர் சசிதர் ஜெக்தீஷ் ஆகியோர் பங்கேற்றனர், தொடர்ந்து நவீனமுறையில் மாற்றம் செய்யப்பட்ட வகுப்பறைகளுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து பார்வையிட்டார்.தொடர்ந்து பள்ளியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த கலை மற்றும் துணிகளால் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டார்.



 

முன்னதாக விழாவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் ‘100 ஆண்டுக்கு மேல் திராவிட இயக்க தொண்டர்களாக இருந்த குடும்பத்தில் இருந்து தற்போது அமைச்சராக பணியாற்றுகிறேன். அரசியலுக்கு வருவதற்கு முன் வங்கியாளராக இருந்துள்ளேன். பல வங்கிகளுடன் இணைந்து கலந்து ஆலோசித்து உள்ளேன். வங்கிகளின் செயல்பாடுகள் நமக்கும் நம் நாட்டிற்கும், மக்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்க செயல்பட்டு கொண்டுள்ளேன்.



 

திராவிட கொள்கையின் முக்கியமான அம்சமே கல்வி. சாமானியருக்கு கிடைக்கும் கல்வியும், பெண்களுக்கு கிடைக்கும் கல்வியும், அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட கொள்கையில் முக்கியமானது. கட்டணம் செலுத்த முடியாதவர்கள் அரசாங்க பள்ளிகளை தேடி வரும் நிலையில் அவர்களுக்கும் கல்வியை கொடுப்பது தான் அரசாங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமானது. 80 சதவிகிதமான பெண்கள் கல்வி பெற்றுள்ளனர், குஜராத்தை ஒப்பிடுகையில் வறுமை ஒழிப்பிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது” என பேசினார்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண