அந்நியன் பட விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இயக்குநர் ஷங்கருக்கு எழுதிய கடிதத்திற்கு, தற்போது பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார் இயக்குநர் சங்கர். பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், 2005-ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவுள்ளார். இந்நிலையில் அந்த படத்தின் கதைக்கு முழு உரிமம் தயாரிப்பாளரான தன்னிடம் உள்ளதாக ரவிச்சந்திரன் கூறினார். மேலும் அந்த கதையின் முழு உரிமத்தையும் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து பெற்றுள்ளேன், மேலும் அதற்கு உண்டான முழு பணத்தையும் அவரிடம் ஒப்படைத்துள்ளேன், அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது என்று கூறினார்.






இந்நிலையில் அவருடைய கடிதத்திற்கு பதில் கடிதமளித்துள்ள இயக்குநர் ஷங்கர், ”ஒரு தயாரிப்பாளராக 2005-ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படம் மூலம் நீங்கள் கணிசமான லாபத்தை பெற்றுள்ளீர்கள். மேலும் இந்த கதை மற்றும் அதற்கான உரிமம் என்னை சார்ந்தது. மறைந்த அய்யா சுஜாதா இந்த படத்தின் வசனங்களை மட்டுமே எழுதினார், அதற்கான தொகையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத்தாண்டி அவருக்கும் கதைக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை” என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என்று பதிலளித்துள்ளார்.