பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. எதார்த்த கதைக்களம் என்பதை தாண்டி ஆர்யா மற்றும் விஷால் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இருவரும் இணைந்து நடித்திருந்த காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆர்யா மற்றும் விஷால் இருவருமே நீண்ட கால நண்பர்கள்தான். திரையில் மட்டுமல்லாமல் திரைக்கு பின்னால் பல மேடைகளிலும் கூட ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதும் இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் ஒரு திரைப்படம் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என்ற ஆசை விஷால், ஆர்யா ரசிகர்களுக்கு உண்டு. அதனை நிறைவேற்றும் வகையில் அரிமா நம்பி, இருமுகன் போன்ற ஆக்ஷன் படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் ஆர்யா, விஷாலை வைத்து புதிய படம் இயக்க போவதாக அறிவித்தார்.
“எனிமி” என பெயர் வைக்கப்பட்ட இந்த புதிய படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். டிக்டாக் புகழ் மிருனாளினி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் குறிப்பாக ஆர்யாவின் காட்சிகளை படமாக்கிவிட்டார் இயக்குநர். கொரோனா ஊரடங்கு காரணமாக கிடப்பில் போடப்பட்ட படங்களுள் “எனிமி” படமும் ஒன்றுதான்.
இந்நிலையில் படத்தின் இறுதிக்காட்சிகளை படமாக்க படக்குழு ஆயத்தமாகியுள்ளது. வருகிற 9-ஆம் தேதி முதல் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாரத்தில் படத்தின் காட்சிகளை எடுத்து முடித்து போஸ்ட் புரடொக்ஷன் வேலைகளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷால் தனது 31 வது படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். தற்போது ஷெடியூல் செய்யப்பட்ட எனிமி படத்தின் படப்பிடிப்பையும் முடித்துக்கொண்டுதான் சென்னை திரும்புவார் என தெரிகிறது. விஷால் 31 படத்தை அறிமுக இயக்குநர் ஒருவருக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சக்கரா படத்திற்கு பிறகு படங்களை எதிர்பார்த்து காத்திருந்த விஷால் தற்போது எனிமி, விஷால்31 மற்றும் துப்பறிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் படு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதேபோல ஆர்யா கோலிவுட்டின் பிஸி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ஒரு பக்கம் உடற்பயிற்சி, சைக்கிளிங் என ஃபிட்னஸில் ஆர்வமாக இருக்கும் ஆர்யா. மறுபக்கம் இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் டெடி இரண்டாம் பாகம், சுந்தர் சி-யின் அரண்மனை 3, விஷாலுடன் எனிமி, பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் வட சென்னையில் உள்ள குத்துச்சண்டை வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல அரண்மனை 3 படமும் இறுதிக்கட்ட தயார் நிலையில் உள்ளது. இந்த திரைப்படம் தியேட்டர்கள் திறந்த பின்னர் முதற்கட்ட வெளியீட்டு பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தகக்கது.