நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  பரவத் தொடங்கியது சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உலக மக்களுக்கு பெரும் இன்னல்களையும், சவால்களையும் தந்துவருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு வல்லரசு நாடுகள் பலவும் வழிதெரியாமல் திணறி வருகின்றனர். 




இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக  தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தினந்தோறும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வந்தது. அது படிப்படியாக குறையத் தொடங்கி தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 40-க்கு கீழ் வந்து நேற்று 34-ஆக பதிவாகியுள்ளது. 




மேலும் இதுவரை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 284 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 19 ஆயிரத்து 761 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று ஒரேநாளில் மட்டும் 34 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 35 பேர் குணமாகி சென்றுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 268  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 




இந்நிலையில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமையான பிரசித்தி பெற்ற திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் இன்று காலை நடைதிறக்கப்பட்டு, கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் பக்தர்கள் வழிபட தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10- ஆம் தேதி முதல் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் அர்ச்சகர்கள் மட்டும் நித்திய கால பூஜைகளை செய்து வந்தனர். 




இந்நிலையில் கொரோனா பரவல் சற்றே குறைந்துள்ளதைத் தொடர்ந்து இன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் இன்று திறக்கப்பட்டன. மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதுமான பரிமள ரெங்கநாதர் கோயில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் நடைபெற்று, பரிமள ரெங்கநாதர் பெருமானுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதேபோல் பிரசித்திபெற்ற மயூரநாதர் கோவில், சீர்காழி சட்டநாதர் கோவில், செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோவில், புதன் ஸ்தலமான திருவெண்காடு கோவில், ராகு, கேது பரிகார ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் பக்தர்களின் வழிபாட்டுக்காக இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.