2010 ஆம் ஆண்டு ஆர்யா - சந்தானம் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் இன்றோடு 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


ராஜேஷின் வித்தியாசமான படம் 


2009 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ படம் இயக்குநராக எம்.ராஜேஷ் அறிமுகமானார். முதல் படமே வித்தியாசமான காதல் கதையை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அவரின் அந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ஆர்யா வருவார். இப்படியாக சிவா மனசுல சக்தி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற, ராஜேஷின் 2வது படமாக ஆர்யா நடிப்பில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் உருவானது. 


இந்த படத்தில் நயன்தாரா, சந்தானம், மொட்ட ராஜேந்திரன், சுப்பு பஞ்சு, விஜயலட்சுமி, ஷகிலா, அஸ்வின், சித்ரா லட்சுமணன், லட்சுமி ராமகிருஷ்ணன் என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் காமெடி கதையை அடிப்படையாக கொண்ட நிலையில் ஆர்யாவுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. 


படத்தின் கதை 


ஆர்யா டிகிரி முடிக்காமல் அரியர் மேல் அரியர் வைத்து வேலை இல்லாமல் ஊர் சுற்றும் இளைஞர். இவரின் நண்பர் சலூன் கடை வைத்திருக்கும் சந்தானம். இதனிடையே அரியர் பரீட்சையின் போது தேர்வு கண்காணிப்பாளராக வரும் நயன்தாராவை பார்த்ததும் காதலிக்க தொடங்குகிறார். இதற்கிடையில் ஆர்யாவின் அண்ணனான கால்நடை மருத்துவர் சுப்பு பஞ்சுவுக்கும்,நயனின் அக்காவான விஜயலட்சுமிக்கும் திருமணம் ஆகிறது.  


தொடர்ந்து ஆர்யா, நயன்தாராவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கையில், இருவர் வீட்டிலும் அவர் மீது வேலை இல்லாதவர் என்ற முத்திரை குத்தப்படுகிறது. இதனால் ஆர்யா தன்னை நிரூபிக்க தனது வீட்டை விட்டு வெளியேறுகிறார். பல தடைகளை எதிர்கொள்ளும் அவர், சந்தானம் உதவியுடன் டூடோரியல் சென்டர் ஆரம்பிக்க உள்ளூர் தாதா மொட்ட ராஜேந்திரனிடம் கடன் வாங்குகிறார். பதிலுக்கு தன் மகனை 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார். 


 இறுதியில், டூடோரியல் சென்டர் தொடங்கினாலும் ஆர்யாவுக்கு பல பிரச்சினைகள் வருகிறது. இதையெல்லாம் கடந்து வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்று நயன்தாராவை திருமணம் செய்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும். 


கேமியோ ரோலில் வந்த ஜீவா


எப்படி ஆர்யா, சிவா மனசுல சக்தி படத்தில் கேமியோ ரோலில் வந்தாரோ, அதற்கு கைம்மாறாக இந்த படத்தில் ஜீவா கேமியோ ரோலில் வந்திருப்பார். இதேபோல் இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை வாங்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் ராஜேஷின் அடுத்தப்படத்தில் ஹீரோவாக நடித்தார். முதலில் பழிவாங்கல் கதையாக உருவான பாஸ் என்கிற பாஸ்கரன் பின்னர் முழு நீள காமெடி படமாக எடுக்கப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 


ஆர்வ கோளாறு நண்பரால் ஒருவர் என்னென்ன பாடுபடுவார் என்பதை சந்தானம் அழகாக நடித்து காட்டியிருந்தார். ‘ஊர்ல 10,15 ப்ரண்ட் வச்சிருக்கிறவன்லாம் சந்தோசமா இருக்கான். ஒரே ஒரு ப்ரண்ட் வச்சிட்டு நான் படுற பாடு இருக்கே’ என தன் சொந்த வாழ்வில் அப்பா பேசிய வசனத்தை மாற்றி இந்த படத்தில் பயன்படுத்தியிருந்தார் சந்தானம். மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சந்தானம் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.