பழம்பெரும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களின் வரிசையில் மிக முக்கியமான ஒரு நிறுவனமாக இருந்தது ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் ஏ.வி.எம் நிறுவனம். இன்றும் பல்வேறு துறைகளில் நிலைத்து நிற்கும் சாம்ராஜ்யத்தை ஏ.வி.எம் படைத்தமைக்கு மிக முக்கியமான காரணம் அவர்களின் நிர்வாக திறமையும், சரியான கதையை தேர்வு செய்து அதை ரசிகர்களின் ரசனைக்கேற்ப படைக்கும் ஆற்றலே.
சம்சாரம் அது மின்சாரம்:
ஒரு காலகட்டத்தில் முன்னணி நிறுவனமாக கோலோச்சி வந்த பாரம்பரியமான ஏ.வி.எம் நிறுவனத்தின் பொறுப்பை முழுவதுமாக கையில் எடுத்து சிறப்பாக நடத்தி வருகிறார் ஏ.வி.எம் சரவணனின் பேத்தியான அருணா குகன். ரீமேக் படங்களை தயாரிப்பதில் பெயர் போனது ஏ.வி.எம் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் வெற்றி விழா கண்ட ஒரு ரீமேக் படம் தான் விசு இயக்கத்தில் வெளியான 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம்.
இயக்குநர் விசு சினிமாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னர் நாடகங்களையே இயக்கி வந்தார். அப்போது அவர் இயக்கிய 'உறவுக்கு கை கொடுப்போம்' நாடகம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த கதையை ஒரு திரைப்படமாக இயக்கினார் ஒய்.ஜி. மகேந்திரன். ஆனால் நாடகத்துக்கு கிடைத்த வெற்றியும் வரவேற்பும் திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை. அதே கதையை சற்று ரசனை சேர்த்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விசுவை வைத்தே ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த திரைப்படம் தான் 'சம்சாரம் அது மின்சாரம்'. இன்றும் எவர்கிரீன் படமாக கொண்டாடப்படும் இப்படம் உருவான விதம் குறித்து துணுக்கு செய்தி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அருணா குகன்.
"ஒரு வெற்றிப் படத்தை ரீமேக் செய்யக்கூடாது, ஆனால் சரியாக ஓடாமல் போன படங்களில் இருந்து நாம் கற்று கொள்ளலாம் என என்னுடைய தாத்தா எப்போதும் என்னிடம் கூறுவார். விசு சார் இயக்கிய ‘உறவுக்கு கை கொடுப்போம்’ நாடகம் பற்றி அவருடைய நெருங்கிய நண்பர் மூலம் தெரிய வந்தது. பார்வையாளர்கள் க்ளைமாக்ஸை எழுந்து நின்று கைதட்டி கொண்டாடினார்கள். அந்த சாதனையை நிறைவேற்றுவது என்பது எளிதான ஒன்றல்ல. இந்தக் கருத்து என் தாத்தாவின் மனதிலும் இதயத்திலும் ஆழமாக வேரூன்றி இருந்தது.
நாடகத்தில், அந்தக் காட்சிக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. ஆனால் அது ஏற்கனவே மற்றொரு தயாரிப்பாளரால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இருப்பினும் அப்படம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க தவறியது. பின்னர் என் தாத்தா அதன் உரிமையை வாங்கி படத்தில் என்ன குறை இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதை சரி செய்வதில் முனைப்பாக இருந்தார். விசு சாருடன் கதையை விவாதித்து ஒரு விரிவான கலந்துரையாடல் நடத்தினார்.
அன்றைய நாட்களில், நாடகங்களில் பொதுவாக உயரடுக்கு மக்கள் மட்டுமே பார்வையாளர்களாக கலந்து கொள்வார்கள். ஆனால் சினிமா என்பது பரந்த பார்வையாளர்களுக்கு போய் சேர்த்தது. என் தாத்தாவின் பார்வை தெளிவாக இருந்தது. அவர் படத்தை உலகளவில் ஈர்க்கும் வகையில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். அதை அடைவதற்கு மிக முக்கியமான சீக்ரெட்டாக நகைச்சுவை இருக்குமென முழுமையாக நம்பினார்.
இதன் விளைவாக தான் கதையில் மனோரமா ஆச்சியின் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டது. அவரின் அனைத்து பெருமையும் சேர்ந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது" என்ற மிக நீண்ட பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார் அருணா குகன்.
இப்படம் ஒரு வரலாற்று காவியம். இன்றும் என்றும் அனைவரது ஆல் டைம் பேவரட் படமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.