தமிழ்ராக்கர்ஸ் வெப் தொடர் நாளை வெளியாகவுள்ள நிலையில் அது தொடர்பாக அருண் விஜய் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த வெப் தொடரில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், எம்.எஸ்.பாஸ்கர், அழகம்பெருமாள் போன்றவர்களும் நடித்துள்ள நிலையில் ஏவிஎம் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
திரையுலகிற்கு பெரும் தலைவலியாக உள்ள தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி தளங்கள் பின்னணியில் உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கும் பணியின் போது நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய் ருத்ரா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ள அருண் விஜய் வெப் தொடர் குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த வெப் தொடரைப் பார்த்த பிறகு மக்கள் இத்தகைய பைரசி தளங்களில் படம் பார்ப்பதை நிறுத்திவிடுவார்கள் என்றும், இது திரைப்படத் துறையில் திரைப்படத் திருட்டுப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வெப் தொடரில் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால் முதலில் சிறு தயக்கம் இருந்தது. ஆனால் அறிவழகன் மற்றும் ஏவிஎம் நிறுவனம் போன்றவற்றால் எனக்கு நம்பிக்கை பிறந்தது. எங்களால் முடிந்ததைச் செய்துள்ளோம். எனது எல்லா படங்களும் தமிழ் ராக்கர்ஸ் பைரசி தளங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் விரக்தியடைந்தோம்.
இத்தகைய திருட்டு வலைத்தளங்கள் டெலிகிராம் சேனல்கள் மூலமாகவும் வளர்ந்து வருகிறது. தெலுங்குத் திரையுலகம் இந்த அச்சுறுத்தலை எப்படிக் கட்டுப்படுத்த முடிந்தது என்றால் திருட்டு இணைய தளங்களில் படம் பார்க்க மாட்டேன் என ரசிகர்கள் பிடிவாதமாக இருந்தது தான். அவர்கள் தங்கள் நட்சத்திரங்களை திரையரங்குகளில் மட்டுமே பார்க்க விரும்புகின்றனர். இந்த தொடர் இங்குள்ள மக்களிடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன் என அருண் விஜய் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்