தருமபுரி அருகே சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்ற மறுத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சிஇஓ-விடம் மனு. 


 நாடு முழுவதும் நேற்று இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளிகளில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். ஆனால் தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பேடர அள்ளி  அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர்  தமிழ்செல்வி  தேசிய கொடியை ஏற்ற மறுத்தார். தனது சார்பில் பள்ளியில் பணி புரியும் மூத்த ஆசிரியராக முருகன் என்பவரை தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி உள்ளனர்.  இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 


இச்சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலை தலங்களில் வெளியானது. அந்த வீடியோவில் பேசிய தலைமை ஆசிரியை ’’நான் யாக்கோபாவின் சாட்சி என்ற உலக அளவிலான கிறிஸ்தவ அமைப்பின் ஒரு பகுதியை சார்ந்தவர் என்றும் நாங்கள்  எங்களின் கடவுளை மட்டுமே வணங்குவோம். எங்களது வணக்கமும் தங்கள் தெய்வத்திற்கு மட்டுமே. தேசியக்கொடிக்கு மரியாதை தருகிறோம்.  தேசிய கொடியை அவமதிக்கவில்லை’’ என்ற வீடியோ வைரல் ஆனது. இதனை எடுத்து கிராம மக்கள், பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்செல்வி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பள்ளிக்கு மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் தெரிவித்தனர். மேலும்உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சென்னை வரை சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.