நடிகர் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தின் கதை ரெடியாக உள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் ஜோதிகா, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலரும் நடித்த படம் வேட்டையாடு விளையாடு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று அதற்கு முன்னர் வெளியான "படையப்பா" படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவர்ந்தது.
பெண்களை கடத்தி கொலை செய்யும் கொலைகாரர்கள், அவர்களை பிடிக்க செல்லும் நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு ஏற்படும் இழப்புகள் என இப்படம் க்ரைம் த்ரில்லராக சென்றாலும் வில்லன்களை ஓரினச்சேர்க்கையாளராக காட்டியிருந்தது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது கமலுக்கு கிடைத்தது. சமீபகாலமாக பல படங்களின் இரண்டாம் பாகம் வெளிவந்த நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின் 2 ஆம் பாகம் எப்போது உருவாகும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதுதொடர்பான தகவல்களும் சமீபகாலமாக வெளிவந்த நிலையில் இருந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் இதுதொடர்பான கேள்விக்கு இயக்குநர் கௌதம் மேனன் பதிலளித்துள்ளார். அதில் 150 பக்கத்திற்கு வேட்டையாடு விளையாடு படத்தின் 2 ஆம் பாகம் கதை ரெடியாக இருப்பதாகவும், ஆனால் அதற்கான நேரம் வரவேண்டும். கடைசி அரை மணி நேர கதையை செதுக்கிட்டு இருக்கேன். இன்னும் கமல் சாரை மீட் பண்ணனும். அவர் இப்ப ரொம்ப பிசி. கமல் பண்ணுவாரான்னு தெரியாது. எனக்கு அடுத்தப்படமாக வேட்டையாடு விளையாடு அமைந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கௌதம் தெரிவித்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்