8 ஆண்டுகளை கடந்த கபாலி


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. மலேசிய கேங்ஸ்டராக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். கபாலி படத்தின் கலை இயக்குநர் கபாலி படப்பிடின் போது நிகழ்ந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


ஃபோட்டோ எடுக்க கேட்டு மிரட்டிய மலேசிய ரவுடி






" கபாலி படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு பெரிய மலேசிய ரவுடி ஒருவர் வந்து ரஜினியுடன் ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டார் . ஃபோட்டோ எடுக்கவில்லை என்றால் யாரும் இந்தியா திரும்பிச் செல்ல முடியாது என்று அந்த நபர் மிரட்டல் விடுத்தார். அவர் பேசுவதை ரஜினி சார் தனது கேரவனில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தார். பின் ஒருவரை அழைத்து அந்த நபர் என்ன சொன்னார் என்று கேட்டார். அந்த நபர் மிரட்டியது தெரிந்தது. அவனை தன்னிடம் கூட்டி வரச் சொன்னார். அந்த ரவுடியிடம் மலேசியாவின் செல்வாக்கு மிக்க நபர் ஒருவரின் பெயரைச் சொல்லி அந்த நபருக்கு ஃபோன் செய்வதாக ரஜினி சொன்னதும் அந்த ரவுடி அப்படியே சைலண்டாகி விட்டார். நாங்கள் இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல முடியாதுனா சொன்ன? நா ஒரு வார்த்த சொன்னா  நீ இந்த ஊர்லயே இருக்க மாட்ட. அடுத்து கபாலி படம் ஷூட் முடியுற வர உன்ன என் கண்ணுல நான் பாக்கவே கூடாது என்று அந்த நபரை ரஜினி மிரட்டி அனுப்பினார். பாட்ஷா படத்தின் ரஜினி ஒரு அவதாரம் எடுப்பது போல் நிஜத்தில் அன்று மாஸ் காட்டினார். படத்தில் மட்டுமில்லை ரஜினிகாந்த்  நிஜத்திலும் பெரிய ஹீரோதான்" என்று ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


வேட்டையன் & கூலி


வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். கிரீஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.