அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்காக ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவதாக இருந்த தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் முதல் கட்டமாக 4 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வர்கள் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை https://trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
நிர்வாகக் காரணங்களுக்காகத் தேர்வு ஒத்தி வைப்பு
இந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை தெரியுமா?
- எழுத்துத் தேர்வு
தாள் 1 – 3 மணி நேரத்துக்கு 100 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும்.
பிரிவு 1- எம்சிக்யூ எனப்படும் பல்வேறு தெரிவுகளில் இருந்து சரியான விடையைத் தேர்வு செய்யும் முறை. இதில் 50 கேள்விகள் கேட்கப்படும். தமிழ் மொழிக்கு தலா 25 கேள்விகளும் பொது அறிவுப் பகுதியில் 25 கேள்விகளும் கேட்கப்படும்.
பிரிவு 2 - விவரித்து எழுதும் முறை. இதில் 50 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும்.
தாள் 2- இதிலும் 3 மணி நேரத்துக்கு 100 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும்.
- நேர்காணல்
நேர்காணல் 30 மதிப்பெண்களுக்கு வைக்கப்படும். உள்ளடக்க அறிவு, மொழி ஆளுமை, பேசும் விதம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக வைத்து முடிவு எடுக்கப்படும்.
தொடர்ந்து தள்ளிப்போகும் தேர்வுகள்
இதற்கிடையே தமிழ்நாடு மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு, இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு ஆகிய தேர்வுகளும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர நடத்தப்படும் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://trb.tn.gov.in/