சிறிய பட்ஜட் படங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்


சிறிய பட்ஜட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போவது சமீப காலத்தில் அதிகரித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று. பெரிய பெரிய சூப்பர்ஸ்டார்களின் படங்கள் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழ் நாட்டிலும் உள்ள திரையரங்கங்களை ஆக்கிரமித்துவிட, மறுபக்கம் அறிமுக இயக்குநர்கள் இயக்கும் சிறிய பட்ஜட் படங்கள் ஒரு சில திரையரங்கங்களைப் பெறவே பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. சமீபத்தில் வெளியான கிடா மற்றும் நாடு போன்ற படங்கள் போதுமான டிக்கெட் விற்பனை இல்லாமல் காட்சிகள் ரத்து செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது.


பிரச்னையை பெரிதாக்கும் ரீரிலீஸ்


இப்படியான நிலை ஒருபக்கம் இருக்க சமீப காலங்களில் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப் படுகின்றன. முத்து , படையப்பா, ஆளவந்தான், விண்ணைத் தாண்டி வருவாயா, வல்லவன், 3, மயக்கம் என்ன, உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டன. இந்தப் படங்கள் இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவது மட்டுமில்லாமல் நல்ல வசூலையும் சம்பாதிக்கின்றன. இப்படியான படங்களும் புதிய சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்க ஒரு தடையாக அமைகின்றன. இந்தப் பிரச்னைகளை எல்லாம் அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது அரணம் படத்தின்  இயக்குநர் பிரியன் அவர்களின் பேச்சு. 


திரைப்படங்கள் ரீரிலீஸ்களை எதிர்த்து பேசிய இயக்குநர்


பிரபல பாடலாசிரியரும் இயக்குருமான பிரியன், லகுபரன், வர்ஷா , கீர்த்தனா உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் அரணம். ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை தமிழ் திரைக்கூடம் தயாரித்துள்ளது. ஷாஜன் மாதவ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  நேற்று மாலை பிரசாத் லேப் இல்  நடந்த அரணம் படத்தின் இசை மற்றும்  ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய அப்படத்தின் காதநாயகனும், இயக்குநருமாகிய கவிஞர் பாடலாசிரியர் தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.


”சின்ன பட்ஜெல ஒரு தரமான ஒரு நல்ல படம் வரும் போது தியேட்டர் கொடுத்து உதவுங்களேன். அதை விட்டு 10 வருஷம் முன்னாடி தியேட்டருக்கு வந்து கோடிகோடியாய் சாம்பாதித்து விட்டு, இப்போ மீண்டும் ரீரிலீஸ் பண்ணுகிறேன் என்கிற பெயரில்  ரஜினி நடித்த முத்து.. கமல் நடித்த ஆளவந்தான்.. இது எல்லாம் இப்போ தேவையா? இந்த முத்து என்கிற படத்தை உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும்  மற்றும் சாட்டலைட், ஓடிடி  இப்டி என பார்த்து சலித்து போன படத்தை இப்போ என்ன  ரீரிலீஸ் பண்ணி, இப்போ சின்ன படங்களுக்கு எல்லாம் தியேட்டர் கொடுக்கக்கூடாத சூழல் ஏற்படுத்துறாங்களே! இதுக்கு ஒரு விடிவு வராதா” என குமுறியுள்ளார்.