சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி இன்று நடக்கவுள்ள நிலையில் இதற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி:
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு நிதி திரட்டும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் பணியாற்றிய லைட்மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவிகளை செய்துவிட்ட போதிலும் சினிமாவில் பணியாற்றும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் இந்நிகழ்ச்சியை நடத்த ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்துள்ளார்.
அன்பின் சிறகுகள் என்ற பெயரில் இன்று இரவு 7 மணி முதல் 12 மணி வரை நேரு உள்விளையாட்டரங்களில் இந்த சிலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை காண வருகை தரும் பொதுமக்கள், ரசிகர்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரையிலான மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாகன இணைப்பு சேவையும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூஃபி பாடல்கள்
இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் சூஃபி இசைப்பாடல்களை பாடவுள்ளார். இந்த பாடல் அவருக்கு கைவந்த கலை என்ற போதிலும், இதில் சிறப்பு என்னவென்றால் ஏ.ஆர்.ரஹ்மான் சூஃபி இசையை காதல் பாடல்களில் கூட பயன்படுத்தியிருப்பார்.
இறைவன் மீது அளவற்ற அன்பு செலுத்துபவர்கள் இஸ்லாமியர்களால் சூஃபி என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் பிற மதங்களில் அருளாளர்கள் என்ற பெயரில் இருக்கிறார்கள். இத்தகைய சூஃபிக்கள் தங்கள் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம் பாடல்களை எழுதினர். இந்தியாவில் கவ்வாலி என்ற சூஃபி இசையின் வடிவம் மிக பிரபலமானது.இதில் பெரும்பாலும் உருது வார்த்தைகளே இடம் பெறும்.
ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா பாடல்களில் சூஃபி இசையை பயன்படுத்தி இருந்தாலும், இந்த இசை நிகழ்ச்சியில் முழுக்க இறை பாடல்களே பாடப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த இசை நிகழ்ச்சிக்காக டிக்கெட்டுகள் ரூ.1000 தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.