இசைப்புயல் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆஸ்கர் நாயகன், இசை மேஸ்ட்ரோ ஏ.ஆர் ரஹ்மான் தனது இசையால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளார். அவரை ஒரு முறையேனும் சந்தித்து விடமாட்டோமா? பேசிவிடமாட்டோமா? என பலரும் ஏக்கப்படும் அளவுக்கு சிறிதும் ஈகோ இல்லாத யார் மனதையும் புண்படுத்தாத ஒரு உன்னத மனிதர்.
சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தன்னுடைய இசைப்பயணத்தின் தொடக்கக் காலகட்டத்தில் அவர் எதிர்கொண்ட பணச் சிக்கல்கள், சவாலான விஷயங்களையும் போராட்டங்களைப் பற்றியும் பகிர்ந்து இருந்தார்.
"நான் ஸ்டூடியோ ஆரம்பித்த போது அங்கு ஒரு இசைக்கருவி கூட கிடையாது. ஒரு ஆம்ப்ளிஃபையர் அல்லது ஈக்வலைஸர் என எதுமே இல்லை. ஒரு ஷெல்ஃப் மற்றும் ஏசி மட்டுமே இருந்தன. எதையும் வாங்க என்னிடம் பணம் இல்லை என அங்கேயே உட்கார்ந்து இருந்தேன்" என்றார்.
அந்த சமயத்தில் தன்னுடைய குடும்பம் அவருக்கு எப்படி ஆதரவாக இருந்தது என்பது பற்றி பகிர்ந்து இருந்தார். "என்னுடைய அம்மா நகைகளை அடமானம் வைத்து பணம் கொடுத்த பிறகு தான் என்னுடைய முதல் இசைக் கருவியை வாங்கி ரெகார்டிங் ஆரம்பித்தேன். அப்போது தான் என்னுடைய எதிர்காலத்தை பார்க்க முடிந்தது. அந்த தருணத்தில் இருந்து தான் என் வாழ்வில் மாற்றம் வந்தது." என்றார்.
மேலும் ரஹ்மான் பேசுகையில் " நான் கல்லூரியில் சேரவில்லை. ஒரு கட்டத்தில் முழுமையற்ற உணர்வை எதிர்கொண்டேன். என்னுடைய 12ஆவது வயதில் 40, 50 வயது மதிக்கத்தக்க நபர்களுடன் நான் தொடர்பில் இருந்தேன். இசை மீது இருந்த அதீத ஆர்வத்தால் இசை சார்ந்த பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்ததில் பல வியக்கத்தக்க விஷயங்களை அறிந்து கொண்டேன். அதில் ஏராளமான விஷயங்கள் இருப்பதை தெரிந்து கொண்டேன்" என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர் ரஹ்மான் மனம் தளர்ந்து போன சமயத்தில் எல்லாம் அவரின் அம்மாவின் வார்த்தைகள் தான் ஆறுதலாக இருந்துள்ளது. அவர் கொடுத்த ஊக்கமும் உத்வேகமும் தான் இன்று அவரை இந்த சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கிறது. வாழ்க்கையின் சாரம்சத்தை மகனுக்கு உணர்த்தி இந்த உலகம் போற்றும் ஒரு இசைக் கலைஞனை ஏ.ஆர். ரஹ்மானை மெருகேற்றிய பெருமை அவரின் அம்மாவையே சேரும்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் வெளியானது. தற்போது ஏ.ஆர். ரஹ்மான் தனுஷின் ராயன், கமல்ஹாசனின் தக் லைஃப் மற்றும் சன்னி தியோலின் லாகூர் 1947 உள்ளிட்ட படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வருகிறார்.