தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனது. இதனால் மாவட்ட முழுவதும் கடந்த ஐந்து மாதமாக கடுமையான வறட்சி ஏற்பட்டது. மேலும் கோடை வெப்பம் அதிகமாக வீசியதால் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றது. இதனால் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பயிர்கள், தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வந்தது. இந்நிலையில் அரூர் கோட்டத்தில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடத்தூர், தாளநத்தம், புட்ரெட்டிப்பட்டி, துரிஞ்சிப்பட்டி, இராமியனஹள்ளி, தென்கரைக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடாசமுத்திரம், மோளையானூர், மெணசி, அ.பள்ளிப்பட்டி, எருமியாம்பட்டி, பறையப்பட்டிபுதூர், அரூர், கீரைப்பட்டி, கொளகம்பட்டி உள்ளிட்ட பகுதியில்  உள்ள பல்வேறு இடங்களில் வாழைத் தோட்டங்கள், பாக்கு,தென்னை உள்ளிட்டவைகள் சேதமடைந்தது.


இந்நிலையில் வறட்சியால் தண்ணீர் இன்றி, குழை அறுவடைக்கு வரும் நேரத்தில், வாழை மரங்கள் பாதியில் உடைந்து விழுந்து, காய்ந்து கருகியது. மேலும் கனமழையின் போது சூறைக் காற்று வீசியது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்கள் குறித்து, தோட்டக்கலைத் துறை முறையாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கைகள் விடுத்தனர்.


இந்நிலையில் தருமபுரி மாவட்டம், அரூர்  கோட்டத்திற்குட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் மொரப்பூர், கடத்தூர், பொம்மிடி வட்டாரங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் கடந்த  வாரத்தில் ஈடுபட்டனர். இதில் அரூர் வட்டாரத்தில் மழையால் 13 ஹெக்டேரும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் 8 ஹெக்டேரும், மொரப்பூர் வட்டாரத்தில் 10 ஹெக்டேரும்  வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை கணக்கெடுப்பில் தெரியவந்தது.


இந்நிலையில் இந்த பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, தோட்டக் கலைத் துறை சார்பில்  மாவட்ட ஆட்சியர் மூலம் மாநில அரசுக்கு அனுப்பப்படவுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம், பேரிடர் மேலாண்மை நிதி அரசிடமிருந்து பெறப்பட்டு  தோட்டக் கலைத் துறை மூலம் வழங்கப்படவுள்ளது. அதேப்போல் சூறைக்காற்று மழையால் தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்கள் பரவலாக பாதிக்கப்பட்டிருந்தாலும், மொத்த மரங்களின் எண்ணிக்கையில் 33 சதவீதத்திற்கு குறைவான அளவு பாதிப்பே இருப்பதால், பேரிடரில் கணக்கில் வராது. அதனால் அவைகளுக்கான கணக்கீடு நடக்கவில்லை என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.