AR Rahman Notice: இசை நிகழ்ச்சிக்காக பெற்ற ரூ.29.50 லட்சம் முன்பணத்தை திருப்பி தராத வழக்கில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்துக்கு எதிராக ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 


கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் ஏ.ஆர். ரஹ்மானிற்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கப்பவில்லை என புகார் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால், இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சர்ச்சைக்கு தானே பொறுப்பேற்ற ஏ.ஆர். ரஹ்மான் டிக்கெட் பணத்தை திரும்பி கொடுத்தார். மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பிரச்சனை அடங்குவதற்குள் ஏ.ஆர். ரஹ்மான் மீது செக் மோசடி புகார் அளிக்கப்பட்டது.


அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பில் அதன் தேசிய மாநாட்டின் செயலாளர் மருத்துவர் விநாயக் செந்தில் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 26 மற்றும் 30ம் தேதிகள் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அவருக்கு முன்பணமாக ரூ. 29.50 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 


ஆனால், தமிழக அரசின் அனுமதி பெறாததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலும் முன் தேதியிட்ட காசோலை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ள மருத்துவர், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாதது தெரிய வந்தது என்றார்.


மேலும், இது தொடர்பாக பலமுறை ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளர் செந்தில் வேலவனை அணுகிய போது எந்த பதிலும் அளிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்காக கொடுக்கப்பட்ட முன்பணம் திரும்ப தரவில்லை என புகாரில் கூறியதுடன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 


அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மோசடி புகார் தொடர்பாக மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்த நிலையில், தன் மீது புகார் அளித்த மருத்துவ சங்கத்துக்கு எதிராக ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு வாங்கிய முன்பணத்தை தரவில்லை எனக் கூறி ஏ.ஆர்.ரஹ்மான் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக புகார்தாரருக்கு எதிராக ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 15 நாட்களுக்குள் ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்குவதுடன், பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.