AR Rahman Concert Mishap: தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்காக போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும் என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். 


சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் ’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததால் பார்வையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பனையூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர் உள்ளே செல்ல முடியாத நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிலர் டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டினர். 


நிகழ்ச்சியின் போது கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் சிலருக்கு மயக்கம், மூச்சித்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏ.ஆர். ரஹ்மானையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து சமூக வலைதளங்களில்  கருத்துகள் பகிரப்பட்டன. இதற்கிடையே நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து கானத்தூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சில சினிமா பிரபலங்கள் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 


அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான தங்கர் பச்சான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள், பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும். 


இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவானால் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை!  இது போன்ற நிகழ்வுகளை மட்டும் பணமாக்க நினைக்கும் ஊடகங்கள் மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி விடுகின்றன. மக்களும் பொது நல சிந்தனையின்றி கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுகின்றனர். 


மக்களும் ஊடகங்களும் மனது வைத்தால் மட்டுமே அனைத்து மாற்றங்களும் நிகழும்! அதுவரை வெறும் புலம்பலிலேயே மக்கள் வாழ்வு முடிந்து போகும்! “ என குறிப்பிட்டுள்ளார். 






மேலும் படிக்க: AR Rahman Concert: ‘நானே பலியாடு ஆகிறேன்’ .. இசை நிகழ்ச்சி பிரச்சினை தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை பதிவு..!


Jawan Box Office Collection: வசூல் வேட்டையில் ‘ஜவான்’.; பாக்ஸ் ஆபிஸ் சாதனை குறித்து அப்டேட் கொடுத்த அட்லீ!