இந்தியாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இயங்கி வருபவர். ஆனால் சில கசப்பான சம்பவங்களால் கடந்த 2019-ஆம் ஆண்டு மனம் நொந்து ட்விட்டரில் இருந்து வெளியேறினார்.
ட்விட்டரில் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்
2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர்ச்சியான கும்பல் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அனுராக் காஷ்யப் உள்பட திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் இணைந்து கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதனையடுத்து ட்விட்டர் தளத்தில் அனுராக் காஷ்யப் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவரது மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் தொடங்கி கொலை மிரட்டல் வரை வந்த நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
’குண்டர்கள் நாட்டை ஆள்வார்கள்'
இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம், “இது தான் என் இறுதி ட்வீட். பயம் இன்றி என் மனதில் பட்டதை பேசமுடியாத சூழலில் நான் பேசாமலேயே இருந்து விடுவேன்.
உங்கள் மகள் ஆன்லைன் மிரட்டல்களுக்கு இலக்காவது குறித்து யாரும் யோசிக்க மாட்டார்கள். குண்டர்களே இனி ஆளப்போகிறார்கள். புதிய இந்தியாவைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்” என ட்வீட் செய்து விட்டு ட்விட்டரை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து அதே ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற 2019, டிசம்பர் மாதம் மீண்டும் ட்விட்டரில் இணைந்தார்.
நினைவுகூர்ந்த அனுராக்
தொடர்ந்து ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களிலும் அனுராக் காஷ்யப் பங்கேற்றார்.
இந்நிலையில் தனது மகளுக்கு ட்விட்டரில் பாலியல் மிரட்டல்கள் வந்தது,அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால்தான் ட்விட்டரில் இருந்து வெளியேறியது ஆகியவற்றை நினைவுகூர்ந்து தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அனுராக் காஷ்யப் பேசியுள்ளார். நான் ட்விட்டரில் இருந்து வெளியேறிய நேரம், ஏனென்றால் என் மகளை கடுமையாக ட்ரோல் செய்யத் தொடங்கினர். பாலியல் அச்சுறுத்தல்களை அவர் சந்திக்கத் தொடங்கினார். அதனால் என் மகளுக்கும் மன அழுத்தம், பதட்டம் என பல சிக்கல்கள் வரத் தொடங்கின.
அதனையடுத்து ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு நான் ட்விட்டரில் இருந்து வெளியேறி போர்ச்சுகலுக்குச் சென்றேன்.
அதன் பிறகு படப்பிடிப்பில் இருந்த நான் ஜாமியா மில்லியா விவகாரம் நடந்தபோது தான் இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. நான் மீண்டும் ட்விட்டரில் பேச ஆரம்பித்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நெகட்டிவிட்டி
ட்விட்டரில் இருந்த கடும் நெகட்டிவிட்டி காரணமாக தான் ட்விட்டர் தளத்தை உபயோகிப்பதை நிறுத்தியதாகவும், தனது இருண்ட காலத்திலும் கடும் மன அழுத்தத்துக்கு மத்தியிலும்தான் பணியாற்றியது குறித்து அனுராக் இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதே நேர்காணலில், அனுராக் காஷ்யப்பும் கடந்த ஆண்டு மாரடைப்பு மற்றும் அவரது உடல்நிலை எவ்வாறு மோசமடைந்தது என்பதைப் பற்றி விவாதித்தார்.
அனுராக் காஷ்யப்பின் 'ஆல்மோஸ்ட் பியார் வித் டிஜே மொஹபத்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 19-வது மராகேச் திரைப்பட விழா இந்தப் படம் முன்னதாகத் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.