போஜ்புரி, தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் பிரபலமான வில்லன் நடிகர் மற்றும் பாஜக எம்பியுமான ரவி கிஷன் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். இவருக்கு இஷிதா என்ற ஒரு மகள் உள்ளார்.
தனது சிறு வயதில் இருந்தே இஷிதாவிற்கு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் கொண்டு இருந்துள்ளார். அவரின் தந்தை ஒரு நடிகர் மற்றும் அரசியல்வாதியாக இருப்பினும் தன்னுடைய இராணுவ பணி மீது இருந்த ஆசை கொஞ்சம் கூட இஷிதாவுக்கு குறையவில்லை. அதற்காக கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.
அதன் அடிப்படையில் சமீபத்தில் மத்திய அரசு நடத்திய அக்னிவீர் திட்டத்தின் கீழ் இராணுவ வீரர்கள் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பாதுகாப்புப் படையில் இராணுவ அதிகாரியாக பொறுப்பேற்று உள்ளார் இஷிதா. இந்த திட்டத்தின் மூலம் நான்கு ஆண்டுகளில் ஆறு மாத காலம் பயிற்சி மேற்கொண்ட பிறகு மீதம் உள்ள மூன்றரை ஆண்டுகள் இராணுவ அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு பிறகும் இராணுவத்தில் தொடர விரும்பினால் அவரவர்களின் தொகுதிகளின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும்.
நடிகர் மற்றும் எம்.பியுமான ரவி கிஷன் மகள் இஷிதாவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர், ரவி கிஷன் தனது மகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் இஷிதாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
"என் அருமை நபர் ரவி கிஷன் மகள் இஷிதாவுக்கு வாழ்த்துக்கள். அக்னிவீர் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் அவர் சேர்ந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இஷிதாவுக்கு எனது அன்பையும் ஆசீர்வாதங்களையும் தெரிவியுங்கள். அவரின் இந்த செயல் கோடிக்கணக்கான பெண்களுக்கு உத்வேகமாக அமையும். ஜெய் ஹிந்த்! " என்ற குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் ரவி கிஷன் தனது மகள் இஷிதாவுக்காக ஸ்வீட் நோட் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். "எனது துணிச்சலான மகள் இஷிதா சுக்லா கடந்த மூன்று ஆண்டு காலமாக நமது நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடினமாக உழைத்தால். டெல்லி இயக்குனரகத்தின் 7 பெண்கள் அடங்கிய பட்டாலியனின் கேடட் ஆவார். அங்குள்ள கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் கர்தவ்யா பாதையில் குடியரசு தின அணிவகுப்புக்காக போராடுகிறார். எனது மகள் இஷிதா அக்னிவீர் திட்டத்தின் மூலம் இராணுவத்தில் சேர விரும்புவதாக இன்று காலை தெரிவித்தார். அதற்கு நான் பெட்டா முன்னேறி செல் என்றேன்" என்ற பதிவையும் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி கிஷன் ப்ரீத்தி கிஷன் தம்பதியினருக்கு மூன்று மகள்கள் ரிவா, தனிஷ்க், இஷிதா மற்றும் சக்ஷாம் என்ற ஒரு மகனும் உள்ளார்.