உலகிற்கு வரும் ஆபத்துகளை சூப்பர் ஹீரோக்களை கொண்டு  தடுப்பதை மட்டுமே,  முக்கிய கதைக்களமாக கொண்டு மார்வெல் நிறுவனம் தனக்கென ஒரு தனி திரையுலகை கட்டமைத்துள்ளது. உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் படங்கள், சர்வ சாதாரணமாக சில ஆயிரம் கோடிகளை வசூலாக குவித்து வருகின்றன. அந்த வரிசையில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஆன்ட்மேன் திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து, 2018ம் ஆண்டு வெளியான இரண்டாவது பாகமும் உலக அளவில் ரூ.5,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.


இந்நிலையில் அடுத்து வரவுள்ள அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கான கதைக்களத்தை உருவாக்கும் வகையில், ஆன்ட் மேன் கதாபாத்திரத்திற்கான மூன்றாவது பாகமாக ஆன்ட் மேன் அண்ட் வாஸ்ப்: குவாண்டமேனியா திரைப்படம் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில், அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் முக்கிய வில்லனாக வர உள்ள கேங் இடம்பெற உள்ளார். ஏற்கனவே இப்படத்திற்கான 2 டிரெய்லர்கள் வெளியான நிலையில், இறுதி மற்றும் மூன்றாவது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



அதில், தானோஸின் செயலால் தனது மகள் கேஸி லாங்குடன் இளம் பருவத்தில் இருக்க முடியாததை எண்ணி, ஸ்காட் வருத்தப்படுகிறார். இந்த சூழலில் கேஸி செய்யும் ஒரு சிறிய தவறால், ஸ்காட் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் குவாண்டம் உலகில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு வில்லன் கேங்கை சந்திக்கும் ஸ்காட், அவருடன் ஒரு ஒப்பந்தத்தை போடுகிறார். அதன்படி, தனக்கு தேவையான ஒரு பொருளை ஸ்காட் எடுத்துக் கொடுத்தால், கேஸியின் இளம் வயதில் அவருடன் இருப்பதற்கான நேரத்தை தான் தருவதாக கேங் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறார். இதையடுத்து நடந்தது என்ன, குவாண்டம் உலகில் இருந்து ஸ்காட் தனது குடும்பத்தினர் உடன் தப்பித்தாரா என்பது மீதிக்கதையாக உருவாகியுள்ளது.


 


வழக்கம்போல் கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்ட, அதிரடியான சண்டை காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  கேங் உடன் ஆன்ட்மேன் மோதும் சண்டை காட்சிகள், சிறிய அவெஞ்சர்ஸ் படத்தை பார்ப்பது போன்று பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் சண்டையில் ஆன்ட் மேனை போட்டு, கேங் வெளுத்து வாங்க ரத்தம் தெறிக்க அவர் விழுந்து கிடக்கும் காட்சிகளால், வழக்கமான மார்வெல் திரைப்படத்தில் இருந்து, இந்த படம் வேறுபட்டுள்ளது. அதோடு, புதிய அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கான அடித்தளம் அமைக்க உள்ளதால், ஆன்ட்-மேன் திரைப்படத்தின் 3ம் பாகம் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.