அவ்வப்போது கருத்துல்ல தத்துவங்களை வழங்கி வரும் திருவண்ணாமலை அன்னபூரணி அரசு அம்மாவின் இன்றைய தத்துவம், ‛குடி, புகை, அசைவத்தை ஆன்மிகத்திற்காக தவிர்க்க வேண்டியதில்லை’ என்பது தான். ஏன்... எப்படி... அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். இதோ அந்த விளக்கம்...



 












‛‛ஆன்மிகம் என்பது எளிமையானதா. அதற்கு எளிமையாகத்தான் வாழவேண்டுமா. ஆடம்பரங்கள் இருக்க கூடாதா.ஆன்மிகம் என்பது எளிமையானதே இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அது காற்றைப்போல அனைவருக்கும் உரியதாக இருக்கிறது. ஏனென்றால் இயற்கை படித்தவனுக்கு படிக்காதவனுக்கு, வலிமை உள்ளவனுக்கு இல்லாதவனுக்கு, நல்லவனுக்கு கெட்டவனுக்கு, புனிதனுக்கு பாவிக்கு எனும் பேதம் இன்றி செயல்படுவதால் அது அனைவருக்கும் உணரும் வகையில் எளிமையாகவே இருக்கிறது.



ஆனால் ஆன்மிகவாதி எளிமையானவனாக இருக்க வேண்டிய எந்தவித அவசியமும் கிடையாது. அவன் வெளித்தன்மையிலும் உள்தன்மையிலும் ராஜாவைப் போல் வாழ முடியும். அது அவன் இருக்கும் சூழலையும் வசதியையும் பொருத்தது.



ஆன்மிகம் கட்டுப்பாடுகள் வரைமுறைகள் அனைத்தையும் கடந்து நிற்பது.கட்டுப்பாடு என்ற ஒன்றே ஆன்மிகத்திற்கு தேவையில்லாதது. நீங்கள் கட்டுப்பாடு என்ற பெயரில் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறீர்களோ அந்த கனத்திலிருந்தே உங்கள் ஆணவ மனம் அதைச்சுற்றியே வரத்தொடங்கி விடுகிறது.



அதில் அவன் பலவீனமடைய ஆரம்பித்து விடுகிறான். உங்களின் அசைவ உணவு, மது, புகை அணைத்தும் இதில் அடங்கும். கட்டுப்பாடு என்ற பெயரில் எப்பொழுது இவற்றையெல்லாம் தடை செய்கிறீர்களோ அதிலிருந்தே இவற்றிற்காக ஏங்க ஆரம்பித்து விடுகிறீர்கள். பிறகு அதிலேயே சிக்கிக் கொள்கிறீர்கள்.



ஆன்மிகத்திற்காக உங்கள் வாழ்வை எப்பொழுதும் மாற்றாதீர்கள் அது அசிங்கமான ஒன்று. நீங்கள் ஆன்மிகத்தில் ஈடுபட்டால் உங்கள் ஆன்மிகத்திற்கு சக்தி இருந்தால் அது உங்கள் வாழ்வை மாற்ற வேண்டும். அப்பொழுது மட்டுமே நீங்கள் கட்டுப்பாடுகளையும், குற்ற உணர்ச்சிகளையும் கடக்க முடியும்.



நீங்கள் பல வருடங்களாக ஆன்மிகத்தில் இருக்கிறீர்களா உங்களிடமும் உங்கள் வாழ்விலும் எந்த மாற்றமும் இல்லை என்றால் நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள் என்பதை உணர்ந்து விடுங்கள்.நீங்கள் சரியான இடத்திற்கு சென்றால் வெறும் ஒருமாத காலத்திலேயே உங்கள் வாழ்வை தலைகீழாக புரட்டி எறிந்துவிட்டு சென்றுவிடும்.



உங்களையும் தலைகீழாக உருமாற்றிவிடும். முதலில் இருந்த உங்களை தேடினாலும் கிடைக்க மாட்டீர்கள். இதுவே ஆன்மிகம். இதில் மூழ்கி திளைத்தவன் எந்த வெளிவேஷங்களிலும் சிக்க மாட்டான். எந்த வரையறைகளிலும் நிற்க மாட்டான். உள்தன்மையிலும் ராஜாவாக வாழத்தெரிந்த அவனே வெளிவாழ்விலும் ராஜாவாக கொண்டாடத்தெரிந்தவன்.



அவன் ஆடம்பரமாக வாழ்வதைப்பார்த்தால் உங்களுக்கு பொறாமைப்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனால் அவன் தான் ஆன்மிகம் என்பது வாழ்வைத்தொலைப்பது அல்ல, எதையுமே மிச்சம் வைக்காமல் ரசித்து கொண்டாடி வாழ்ந்து தீர்ப்பது என்பதை அறிந்தவன்.



ஆன்மிகம் என்பது வாழ்வை கட்டுப்பாடுகளின் பிடியிலும் குற்ற உணர்ச்சியின் பிடியிலும் மாட்டிக்கொண்டு வாழ்வைத் தொலைக்க கற்றுக் கொடுப்பதல்ல. இருக்கும் இடத்திலேயே இருக்கும் வாழ்வையே ரசித்து கொண்டாடி வாழக் கற்றுக் கொடுப்பது ஆகும்,’’



என்று வழக்கம் போல தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அன்னபூரணி அரசு அம்மா. போன் மூலமும் தீட்சை பெறலாம் என்று குறிப்பிட்டதை எழுதி மறந்துவிட்டேன்; அதையும் சேர்த்து படித்துக் கொள்ளவும்.