‛ஹோண்டா காரு... நகைக் கடை தேரு...’ என, காஸ்ட்லி அம்மனாக, கடவுளுக்கு காண்ட்ராக்டராக அறிமுகமான அன்னபூரணி அரசு அம்மாவை, ‛சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் ஒரே ஒரு வீடியோ, கபளிகரம் ஆக்கியது. ஊரை திருவிழாவாக்க புறப்பட்ட அன்னபூரணியை, ஊரெல்லாம் சுற்ற வைத்து வேடிக்கை பார்த்தது மீம்ஸ் கூட்டம். மீண்டும் மீண்டும் தலையெடுக்க நினைத்தவரை, அடியோடு சாய்க்க பெருங்கூட்டம் கூடியது. 


என்ன ஆனாலும், பிடித்த பிடியில் உறுதியாக இருந்த அன்னபூரணி அரசு அம்மா, தன் வைபிரேஷன் ஆசியை , எந்த தூசியும் நெருங்காத படி காய் நகர்த்தினார். செங்கல்பட்டு, திருவள்ளூர் என சென்னைக்கு மிக மிக அருகில் அருளாசி வழங்க நினைத்தவரை, சென்னைக்கு மிக மிக தொலைவில் அனுப்பி வைத்தது ஹேட்டர்ஸ் கூட்டம். 


‛உங்களோடு மல்லுக்கட்டி நான் ஏன், என் நேரத்தை வீணாக்கணும்’ என முடிவு செய்த அன்னபூரணி, திருவண்ணாமலை போனார், ஆசிரமத்தை காட்டினார், சாமியராகவே மாறினார். சந்திரமுகி டிரான்ஸ்பர்மேஷன் போல, இவையெல்லாம் நடந்தாலும், பொட்டல் காட்டில், ஓலை தட்டி கட்டிய குடிசையில் தான், தற்போது அன்னபூரணியின் இயற்கை ஒளி பவுண்டேசன் நடந்து கொண்டிருக்கிறது. 


ஏசி காரில், பக்தர்களின் பாசத் தேரில் வலம் வந்து கொண்டிருந்த அன்னபூரணி, இப்படி வியர்க்க விறுவிறுக்க ஆசி வழங்குவதை கண்டு அவரது குழந்தைகள்(பக்தர்கள்) நொந்து தான் போயினர். அப்போது தான் முடிவு செய்தார், அன்னபூரணி. ‛இனி சிம்பிளா தான் இருக்கணும்’ என்கிற முடிவு தான் அது. 



அலங்கார நாற்காலிக்கு பதில், பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. இருப்பதே குடிசை என்பதால், அதை இயல்பாகவே அமைந்துவிட்டது. இந்த சிம்பிள்சிட்டி போதும் என புதிய அவதாரத்தை தொடங்கியுள்ளார் அன்னபூரணி. மண்டையை மறைத்த நேரத்தில் கொண்டையை மறக்க மறந்த தருணமாக, அனைத்தையும் மாற்றிய அன்னபூரணி, பட்டுப்புடவையையும், பதக்க சங்கிலியையும் தவிர்க்க மறந்துவிட்டார். கை நிறைய வலையல்கள் இருப்பது தனிக்கதை.



அன்னபூரணியின் இந்த மாற்றம், இன்னும் சிறிது காலம் தானாம். கட்டடம் எழுப்பிய பின், மீண்டும் பழைய படையப்பாவாக , களத்தில் வந்து பக்தி குளத்தில் அனைவரையும் குளிக்க வைப்பாராம். ‛தெய்வத்துக்கே மாறு வேசமா...’ என்பதைப் போல் இப்போது அன்னபூரணி காட்சியளித்தாலும், விரைவில், ‛தெய்வமே... தெய்வமே.. நன்றி சொல்வேன் தெய்வமே’ என்கிற நிலைக்கு மாறுவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அவரது பக்த குழந்தைகள்!


என்ன தான் ஒதுங்கினாலும், பரபரப்பான இணை பக்கங்களில் அன்னபூரணியின் பெயர் அடிப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. என்ன செய்ய, செலிபிரிட்டிகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்கள் தலைப்புச் செய்திக்குள் தான் வலம் வர வேண்டும்.