ராணிப்பேட்டையில் 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியைச் சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளியான மனோ என்பவருக்கும், அம்மூர்  பகுதியைச் சேர்ந்த அம்சா நந்தினி என்பவருக்கும் கடந்த 3  ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைப் பார்ப்பதற்காக உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மனோவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். 


இதனிடையே கடந்த ஜூன் 4 ஆம் தேதி அதிகாலையில் தனது அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதை கண்டு அலறியுள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் வீடு முழுவதும் தேடி பார்த்தபோது கழிவறையில் இருந்த வாளி தண்ணீரில் மூழ்கிய  நிலையில் குழந்தை இறந்து கிடந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை  தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது யார்? என்ற கேள்வி எழுந்தது. 


இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியம் தலைமையில் 2 தனிப்படைபோலீசார் விசாரணையை தொடங்கினர். முதலில் குடும்பத்தகராறு, சொத்து விவகாரம் என்ற அடிப்படையில் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது மனோவின் அப்பா ராமு பல  ஆண்டுகளுக்குமுன்பு இறந்து விட்ட நிலையில் அவருக்கு சொந்தமான வீடு தோல்ஷாப் பகுதியில் உள்ளது. ராமுவுக்கு பிறகு அந்த வீடு தனக்கு  கிடைத்து விடும் என்று ராமுவின் சகோதரி தேன்மொழி ஆசையாக  இருந்துள்ளார்.


ஆனால் ராமு இறந்ததும் அவரது மனைவி இளமதி வீட்டு வேலை செய்து மனோவை வளர்த்துள்ளார். மனோவும் பூக்கட்டும்
வேலைக்கு சென்றதால் அதன்மூலம் கிடைத்த வருவாயில் குடியிருந்த வீட்டை விரிவுபடுத்தியுள்ளார்கள். இது தேன்மொழிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் மனோவுக்கு தனது மகள் பாரதியை  திருமணம் முடித்து வைப்பதன் மூலம் சொத்து நமக்கு வரும் என்று அவர் நினைத்துள்ளார். ஆனால் அதுவும் நடக்காததால் மனோ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தேன்மொழி
வெறுப்புடன் இருந்துள்ளார். 


இதற்கிடையில் தேன்மொழியும் மகள் பாரதியும் தங்களுக்கு  சாமி அருள் உண்டு என்று கூறி சாமியாடி மந்திரிப்பது, விபூதி அடிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் அடிக்கடி சாமி வந்தது போல ஆட்டம் போட்டு வெறுப்பை மனதில் வைத்துக்  கொண்டு குறி சொல்வது போல பாசாங்கு செய்து மனோவின்  மனைவி அம்சாநந்தினியும், இளமதியையும் சரமாரியாக தாக்கி வந்துள்ளனர். மேலும் பல காரணங்களை சொல்லி குடும்பத்தை பிரிக்க சூழ்ச்சி  செய்துள்ளனர்.


இந்நிலையில் தான் மனோவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் அவர்களுடைய குடும்பத்தில் இந்த குழந்தை தான் முதல் ஆண்  வாரிசு என்பதால் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியில்  திளைத்துள்ளனர். இது தேன்மொழி, பாரதிக்கு மேலும் ஆத்திரத்தை உண்டு பண்ணியது. சம்பவம் நடந்த அன்று இருவரும் மனோவின் வீட்டில் இருந்துள்ளனர். அனைவரும் தூங்கச் சென்ற பிறகு தாய் அருகே படுத்திருந்த ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தையை ஈவு இரக்கம்  இல்லாமல் தண்ணீரில் அழுத்தி கொலை செய்திருக்கிறார்கள்.


இரவு மனோ வீட்டில் தங்கியிருந்ததால் முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட அரக்கோணம் போலீசாரிடம் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆ.நி. விஜயா முன்னிலையில் நடைபெற்ற கிடுக்கிப்பிடி விசாரணையில் சொத்தின் மீது கொண்ட ஆசையால் ஏற்பட்ட விரோதத்தாலும், ஆண் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட வெறுப்பாலும் குழந்தையை ஈவு இரக்கமின்றி பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது வெளிவந்துள்ளது.


இதனையடுத்து தேன்மொழி, பாரதி மற்றும் கொலை செய்தது யார் என்று தெரிந்தும் கொலைக் குற்றத்தை மறைத்த பாரதி கணவரின் அக்கா அனுவையும் போலீசார் கைது செய்து அரக்கோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.