அன்னபூரணி அரசு அம்மா பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கின்றன. இது மிக முக்கியமான அப்டேட். முதல் கணவரை உதறி, இரண்டாவது கணவராக அன்னபூரணி ஏற்றுக்கொண்ட அரசு, இறந்த பின், அவர் நினைவாக சிலை வைத்து அன்னபூரணி வழிபட்டதாக அவரே கூறியிருந்தார்.
‛இருவரும் எங்களுக்குள் சக்தி இருப்பதை உணர்ந்து தான் இணைந்தோம்; அந்த சக்தி தான் எங்களை பயிற்று வித்தது; எங்களுக்குள் செயல்பட்டது. பின், அரசு உடலை அந்த சக்தி எடுத்துக் கொண்டது. அவருக்குள் இருந்த சக்தி, என்னுள் இருந்த சக்திக்குள் ஒன்றிணைந்து , ஒரே சக்தியானது. பின் அந்த சக்தி, பலரை மகிழ்விக்க, அவர்கள் குழந்தையாய், நான் தாயாய் மாற வைத்தது,’ என்றும் பேட்டியில் அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்திருந்தார்.
மூச்சுக்கு முன்னூறு முறை எதற்கெடுத்தாலும் ‛அரசு’ புகழ் பாடி வரும் அன்னபூரணி, உண்மையில் அரசுவிடம் எவ்வாறு இருந்தார் என்பதை அறிய, அவர் வாழ்விடம் குறித்து அறிய ஏபிபி நாடு, களமிறங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் தொண்டமநல்லூர், தாதன்குப்பன் பகுதியில் பகுதியில் அரசு சிலை வைக்கப்பட்டு,அங்கு அன்னபூரணி வழிபாடு நடத்தி வந்த தகவல் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அங்கு சென்றால், அரசு சிலை இருந்த இடம் தரிசாக இருந்தது. தரிசு நிலத்தில் ஒரே ஒரு சின்ன கட்டடம் இருந்தது. அங்கு தான் அரசு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அன்னபூரணியால் பூஜிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சரி நேரில் சென்று அந்த சிலையை பார்க்கலாம் என்று சென்றால், சிலை இருந்த பீடம் மட்டுமே இருந்தது. சிலை பெயர்க்கப்பட்டு வெறும் உடைந்த பீடமே இருந்தது.
அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தால், அதை விட அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அரசு இறப்பிற்குப் பின் அன்னபூரணி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் அரசு சிலை மீது வெறுப்பில் இருந்ததாகவும், அவர் தான், அந்த சிலையை உடைத்து பெயர்த்ததாகவும் கூறப்படுகிறது. ‛நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்... திருக்கோயிலே ஓடி வா...’ என மனம் உருகி வைத்த சிலை, ‛யாரு இவன் யாரு இவன்... கல்லை தூக்கி போறோனே...’ என பாகுபலி சிவலிங்கம் போல, மாயமானது தெரியவந்தது.
அதன் பின் அன்னபூரணியும் அங்கு வருவதை தவிர்த்துவிட்டார் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்