நீங்கள் ஒரு தொலைப்பேசிய சேவையை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, அந்த சேவை முடங்கினால்; அல்லது நிறுத்தப்பட்டதால், வேறு சேவைக்கு மாற நேரிடும். அப்போது, அதே சேவையில் இருப்பவர்கள், தங்களிடம் அந்த வாடிக்கையாளரை வரவைக்க, முயற்சிப்பார்கள். இது தொலை தொடர்பில் நாம் அன்றாடம் சந்தித்து வரும் ஒரு நிகழ்வு தான். 

அன்னபூரணி அரசு அம்மா விவகாரத்திலும் அது தான் நடந்திருக்கிறது. ஆம்... செங்கல்பட்டு மாவட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த சிவசங்கர் பாபாவின் சாம்ராஜ்ஜத்தை தன் வசமாக்க, அன்னபூரணி எடுத்த முயற்சி தான், இன்று அவரின் சம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. 



தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டம் கொஞ்சம் வித்தியசமான பகுதி. இங்கு , ஆன்மீகத்தை முன்னிறுத்தி பல ஆன்மிகவாதிகள் ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். அவர்களின் பலர், தங்களை கடவுளின் அவதாரமாக கூறுவதுண்டு. சிலர், தாங்கள் தான், கடவுள் என்றும் கூறுவதுண்டு. எது எப்படியோ, சிக்காத வரை பிரச்சனை இல்லை. சிக்கிவிட்டால், அவர்களின் அடிப்படையிலிருந்து அஸ்திவாரம் ஆடிப்போவதைத் தான் இதுநாள் வரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

எது என்ன ஆனாலும், இன்னும் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆசிரமங்களும், ஆன்மிக அமைப்புகளும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றிக்கான இடமாகவே செங்கல்பட்டு மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். 

 

இவ்வாறாகத் தான், செங்கல்பட்டு கேளம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த சிவசங்கர் பாபாவின் ஆவர்த்தனம், சமீபத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பள்ளி குழந்தைகள் பாலியல் குற்றச்சாட்டில் சிறை கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார் சிவசங்கர் பாபா. ஆசிரமமாக தொடங்கி, சாம்ராஜ்யமாக மாறிய சிவசங்கர் பாபாவின் சொத்துக்கள், இப்போதும் எண்ணிடலங்காதது. இந்த சொத்துக்களுக்கு எல்லாம் அடிப்படை, அவரை நம்பி கூடிய பக்தர் கூட்டம். அது தான் முதலீடு, மூலதனம் எல்லாமே.



 

சிவசங்கர் பாபா இல்லாததால், செங்கல்பட்டு மாவட்டத்தில், அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு பெருங்கூட்டம் நிற்கதியாய் நிற்கிறது. அவர்களை தன்வசப்படுத்தி, தனக்கான கூட்டமாய் மாற்ற அன்னபூரணி தீட்டிய திட்டம் தான், காஞ்சிபுரம் டூ செங்கல்பட்டு ஷிப்டிங்! 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொண்டமநல்லூர் தாதன்குப்பம் என்கிற கடைகோடியில் தொடங்கப்பட்ட இயற்கை ஒளி பவுண்டேஷன், பெரிய சக்சஸ் ஆகவில்லை. சக்சஸ் என்பது, பெருங்கூட்டத்தை சம்பாதிக்கவில்லை. ஆயிரக்கணக்கிற்கு பதிலாக, நூற்றுக்கணக்கில் தான் பக்தர் எண்ணிக்கையை பெற்றிருந்தார் அன்னபூரணி. இந்த கடைகோடியில் இருந்தால், கடை வியாபாரம் ஆகாது என்பதை அவர் உணர்ந்தார். அதற்காக அவர் செய்த ஒர்க்அவுட்டில் , செங்கல்பட்டு தான் சரியான தேர்வு என முடிவு செய்தார். சிவசஙகர் பாபா விட்டுச் சென்றதை நாம் தொடரலாம் என்பதே அவரது எண்ணம். 



அதற்காக ஒரு முன்னோட்டத்தை அவர் முன்னெடுத்தார். அது தான் டிசம்பர் 19ல், திருப்போரூர் சாலையில் உள்ள கோவிலந்தாங்களில் அவர் நடத்திய முதல் பக்தர் சந்திப்பு. நினைத்தபடி அது சக்சஸ். சரி... நமக்கான கூட்டத்தை இங்கு திரட்டலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு பிறக்கிறது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த இடத்தை விற்றுவிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலத்தை சுற்றியுள்ள பகுதியில் இடம் வாங்கி, புத்திய அத்தியாயத்தை தொடங்க முயற்சித்தார் அன்னபூரணி. அவர் நினைத்த அனைத்தும் நன்றாகவே நடந்தது. 

ஆனால், அவர் நினைக்காதது, தற்போது உள்ள சமூக வலைதளங்களின் அபரிவிதமான வளர்ச்சியின் தாக்கத்தை! 

அவர் எறிந்த பந்து, அவருக்கே திருப்பி அனுப்பப்பட்டது. பழைய வீடியோ, அவரின் புதிய வீடியோக்களை சாம்பலாக்கியது. சிவசங்கர் பாபா போன்ற கட்டமைப்பை ஏற்படுத்தி, நவீன ஆதிபராசக்தியாக அமரலாம் என்கிற ஆசையை, அடியோடு பிடுங்கி புதைத்தது. 

தொடங்கும் முன்பே முடிவை கண்டு முறிந்து போயிருக்கும் அன்னபூரணி அரசு அம்மாவுக்கு, சிவசங்கர் பாபாவின் இடம் மட்டுமல்ல, அவருக்கான இடத்தையே தக்க வைப்பது இனி சிரமம் தான்.