‛அன்னமிட்ட கை... நன்மை ஆக்கிவிட்ட கை...’ அதிமுக-காங்கிரஸ் கூட்டணி இருந்த காலத்தில், அதிகம் பிரச்சாரத்தி் பயன்படுத்திய பாடல் இதுவாக தான் இருக்கும். காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு எம்.ஜி.ஆர்.,யின் இந்த பாடல், இன்றும் என்றும் பிரச்சார பாடலாக தான் இருக்கும்.
1972 செப்டம்பர் 15 இதே நாள், இதே தேதியில் வெளியான திரைப்படம் அன்னமிட்ட கை. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம். எம்.ஜி.ஆர்., நம்பியார் , ஜெயலலிதா ஆகியோர் நடித்த பிளாக் அன்ட் ஒயிட் திரைப்படம். எம்.கிருஷ்ணன் இயக்கத்தில், எம்.ஜி.ஆர்., நடித்த இத்திரைப்படம், இரு மாற்றான் தாய் மகன்களின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்., மற்றும் நம்பியார் இருவரும் மாற்றான் தாய் மகன்கள். இதில் யார் வாரிசு, பிரிந்து இவர்கள் எப்படி இணைகிறார்கள், தந்தை என்ன ஆனார், தாய் என்ன ஆனார் இதற்கெல்லாம் விடை கொடுத்து, இறுதியில் தொழிலாளர்களின் தோழனாக எம்.ஜிஆர்., மாறுவதே அன்னமிட்ட கை.
கே.வி.மகாதேவனின் இசையில் அந்த படத்தில் அனைத்து பாடல்களும் இன்றும் அனைவரும் அறிந்த பிரபலமான பாடல்.
‛அன்னமிட்ட கை... நன்மை ஆக்கிவிட்ட கை...’
‛அழகுக்கு மறு பெயர்...’
‛மயங்கி விட்டேன்...’
‛ஒண்ணொண்ணா... ஒண்ணொண்ணா...’
‛16 வயதினிலே...’
இந்த பாடல்கள் எல்லாம், இன்றும் திருமண வீடுகளிலும், அதிமுக பொதுக்கூட்டங்களிலும் கேட்கலாம். அடிக்கடி கிளாசிக் பாடல்களை ஒலிபரப்பும் ரோடியோக்களிலும் கேட்கலாம். அந்த அளவிற்கு நல்ல இனிமையான பாடல்களை கொண்ட திரைப்படம்.
எம்.ஜி.ஆர்., படங்களில் கொஞ்சம் அவருக்கு சவாலாக இருந்த படமாக ‛அன்னமிட்ட கை’ இருந்ததாக கூறுவதுண்டு. காரணம், அந்த சமயத்தில் சிவாஜியின் இரு படங்கள் தீயாக வந்து நின்றன. ஒன்று அன்னமிட்ட கதை திரைப்படம் வெளியாவதற்கு முன், 1972 ஆகஸ்ட் 26 ம் தேதி வெளியான சிவாஜியின் தவப்புதல்வன் திரைப்படம். மற்றொன்று, அன்னமிட்ட கை வெளியாகி 14 நாட்களில் 1972 செப்டம்பர் 29 ல் வெளியான சிவாஜியின் வசந்த மாளிகை திரைப்படம்.
சிவாஜியின் அந்த இரு படங்களுமே பெரிய அளவில் ஹிட். அதே நேரத்தில் அந்த படங்களோடு ஒப்பிடும் போது, எம்.ஜி.ஆர்.,யின் அன்னமிட்ட கை பெரிய வெற்றியை பெறவில்லை. என்றாலும், எம்.ஜி.ஆர்.,யின் ரசிகர்கள், அன்னமிட்ட கை படத்திற்கு படையெடுத்துக் கொண்டு தான் இருந்தனர். பிந்நாளில் எம்.ஜி.ஆர்.,யின் அரசியலுக்கும், பிரச்சாரத்திற்கும் பெரிய அளவில் பயனளித்த படமாக அன்னமிட்ட கை இருந்தது.
‛