இயக்குநர் சிவா ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார். கிராமத்து கதைகளையும், குடும்பத்து உணர்வுகளையும் வைத்து வீரம், விஸ்வாசம் என அஜித்திற்கு அவர் ஹிட் கொடுத்ததால் ரஜினியை வைத்து எடுத்திருக்கும் அண்ணாத்த படமும் அந்த வெற்றி வரிசையில் இணையும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
படமும் தீபாவளியையொட்டி நவம்பர் நான்காம் தேதி வெளியானது. நீண்ட வருடங்கள் கழித்து ரஜினி கிராமத்து கதையில் நடித்திருப்பதால் அண்ணாத்த படத்துக்கு ரஜினி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தனர்.
ஆனால், படம் எதிர்பார்த்தபடி இல்லை என ரஜினி ரசிகர்களே நொந்துகொண்டனர். முக்கியமாக, படத்தின் கதையில் எந்த புதிதான விஷயமும் இல்லை, விஸ்வாசம், திருப்பாச்சி போன்ற படங்களில் கலவைதான் அண்ணாத்த என விமர்சகர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மேலும் ரஜினி கொடுத்த வாய்ப்பை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எப்படி தர்பார் படத்தில் வீணடித்தாரோ அதேபோல் இயக்குநர் சிவா அண்ணாத்த திரைப்படத்தில் வீண்டித்துவிட்டார் எனவும் பேசப்பட்டது. இதனால் இயக்குநர் தரப்பு கடும் அப்செட் என்ற தகவலும் கோலிவுட்டில் வெளியானது.
அதேசமயம், படம் வெளியான முதல் நாளில் மொத்தம் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் தகவல் வெளியானது . அதுமட்டுமின்றி படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 112 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில், “திரைப்படத்தில் நிறைகுறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத்துரோக ரேஞ்சுக்கு வன்மத்தோடும்,வக்கிரத்தோடும்,நாகரிகமற்றும் சிலர் விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது! சில யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது! இருந்தும் அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்!” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்