நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறியப்படும் சீமான் ஆரம்பத்தில் திரைப்பட இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியவர். அவர் இன்று தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


சீமான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னை சென்ற அவர் பாரதிராஜா, மணிவண்ணன் ஆகியோரிடம் உதவியாளராக இணைந்தார். மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படத்தில் சிறிய வேடத்தில் திரையில் தோன்றிய அவர்  பாரதிராஜாவின் பசும்பொன் படத்தில் கதை மற்றும் திரைக்கதை பிரிவில் பணியாற்றினார்.




அதனையடுத்து இளைய திலகம் பிரபு மற்றும் மதுபாலா ஆகியோரை கதாநாயகன், கதாநாயகியாய் வைத்து 1996ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி என்ற தனது முதல் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் வடிவேலுவின் ஓலைப்பாய் நகைச்சுவை இன்றளவும் ரசிக்கப்படுகிறது.


பாஞ்சாலங்குறிச்சியை அடுத்து முதல் பட கதாநாயகனான பிரபுவை வைத்து 1998ஆம் ஆண்டு இனியவளே திரைப்படத்தை இயக்கிய சீமான் அந்தப் படத்தில், தற்போது முன்னணி பாடலாசிரியராக அறியப்படும் தாமரைக்கு முதல் முதலில் வாய்ப்பளித்தவர்.


இனியவளே திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து சத்யராஜை வைத்து 2000ஆம் ஆண்டு வீரநடை என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில்தான் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பாடல் எழுதுவதற்கு அறிமுகமானார். வீரநடை படமும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஆறு வருடங்கள் கழித்து (2006) மாதவன், பூஜாவை வைத்து தம்பி என்ற படத்தை இயக்கினார்.




தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் நினைவாக அப்படத்திற்கு தம்பி என பெயர் வைத்த சீமான், அந்தப் படம் மூலம் கவனம் ஈர்த்தார். குறிப்பாக, “இங்கு சைலென்ஸ் என்பதையே சத்தம் போட்டுதானே சொல்ல வேண்டியதிருக்கு”, “வேடிக்கை ரோட்ல கொலை நடந்தாலும் வேடிக்கை குரங்கு குட்டிக்கரணம் போட்டாலும் வேடிக்கை” என கவனிக்கத்தக்க வசனங்களை அப்படத்தில் எழுதினார்.


இப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தாவிற்கான விருதை பெற்றார். மேலும் அப்படம் அவரை அனைவராலும் கவனிக்க வைத்தது.


அதனையடுத்து மாதவன், பூஜாவை வைத்து 2008ஆம் ஆண்டு வாழ்த்துகள் என்ற படத்தை இயக்கினார். தூய தமிழில் உரையாடலை கொண்டிருக்கும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வாழ்த்துகள் படத்திற்கு பிறகு அவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை.


இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மாயாண்டி குடும்பத்தார், மகிழ்ச்சி, உச்சிதனை முகர்ந்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 


அவர் பகலவன் என்ற கதையில் விஜய் நடிக்க வேண்டியதாக இருந்ததாகவும் அரசியல் காட்சிகளும், வசனங்களும் அனல் பறந்ததால் அதிலிருந்து விஜய் விலகிவிட்டதாகவும் தகவல்கள் உண்டு. இயக்குநர், நடிகராக மட்டுமின்றி திருப்பி அடிப்பேன், வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் ஆகிய நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண