அஞ்சலிமேனன் இயக்கத்தில் வெளியாக உள்ள 'வொண்டர் வுமன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
மலையாள உலகில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். வெப்பம் படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர் 180, ஓ காதல் கண்மணி, மெர்சல், 24, காஞ்சனா 2, இருமுகன், சைக்கோ சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் என தன் பெயர் சொல்லும் கேரக்டரில் நடித்து வருகிறார். இதேபோல் பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி சென்னையில் ஒருநாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி கர்ப்பமாக இருப்பதாக பதிவு ஒன்றை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டனர்.
இதனைக் கண்ட ரசிகர்களும் பிரபலங்களும் குழப்பமடைந்தாலும், அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால பதிவை நடிகைகள் பத்மபிரியா, அம்ருதா சுபாஷ், சயனோரா பிலிப் மற்றும் அர்ச்சனா பத்மினி ஆகியோரும் பகிர்ந்தனர். இதனையடுத்து இந்த பகிர்வுகள் வொண்டர் வுமன் படத்தின் பிரோமோஷனுக்காக செய்யப்பட்டவை என்பது தெரியவந்தது.
இந்தப்படத்தை, மலையாளத்தில் ‘பெங்களூர் டேஸ்’ ‘கூடே’ உள்ளிட்ட பல இயக்கியதின் மூலம் பிரபலமான அஞ்சலி மேனன் இயக்கி உள்ளார். இந்தப்படம் சோனி ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வேவ்வேறு குடும்ப பின்னணி கொண்ட கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தை எப்படி எதிர்கொள்வது தொடர்பான வகுப்பு ஒன்றில் கூடுவதும், கர்ப்ப கால பிரச்னைகளையும் பேசுவதுமாக ட்ரெய்லர் அமைந்து இருக்கிறது.