தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெறக் கோரி குடியரசு தலைவரிடம் திமுக மனு அளிக்க திட்டமிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி செல்லவுள்ளார். 


தமிழ்நாட்டு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற நாள் முதல் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் திராவிடம், புதிய கல்விக் கொள்கை, சனாதனம்,  திருக்குறள் உள்ளிட்டவை பற்றி பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்.


இதற்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மேலும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான கருத்துகளை ஆளுநர் தெரிவிப்பதாகவும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 


இதனிடையே தமிழக ஆளுநரை திரும்ப பெறக் கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் திமுக  மனு அளிக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒத்த கருத்துடையை, ஜனநாயகத்தில் நம்பிக்கைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மனுவில் கையெழுத்திடலாம் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூட்டணி கட்சி எம்.பி.களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆளுநர் ரவி அவசர அவசரமாக டெல்லி செல்கிறார்


இன்று காலை 10.30 மணிக்கு டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திப்பார் என கூறப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பல்வேறு மாநிலங்களில், மாநில அரசுகள், ஆளுநர்களுக்கிடையே மோதல் வெடித்து வரும் நிலையில், திமுக மற்ற கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டி திமுக விடுத்த கோரிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.


இதுகுறித்து திமுக செய்திதொடர்பாளர் சரவணன் கூறுகையில், "அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை அவர் மறுத்து வருகிறார். அப்படிச் செய்ய வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கட்டளையிடும்போது, ​​ஆளுநர் அதைதான் செய்ய வேண்டும்.


அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கும்போது அரசியலமைப்பு சட்டத்தில் அவருக்கு வேறு எந்தப் பங்கும் இல்லை" என்றார்.


ஆனால், மற்ற எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் இன்னும் நிலைபாட்டை எடுக்கவில்லை. திங்கள்கிழமை அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி இது தொடர்பாக பேசுகையில், "ஜனநாயகத்திற்கு விரோதமான அரசியலமைப்புக்கு எதிரான ஆளுநரின் செயல்களுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும்" என கூறியிருந்தார்.


கடந்த ஏப்ரல் மாதம், மாநில சட்டப்பேரவையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக திமுக தலைவர்கள் தங்களின் எதிர்ப்புப் பதிவு செய்தனர்.


தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த விருந்தை திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும் புறக்கணித்தன.