நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளை ஒட்டி அனிமல் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் அனிமல்.


அர்ஜூன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கி இயக்கியுள்ள இப்படத்துக்கு தொடக்கம் முதலே எதிர்பார்ப்புகள் எகிற வந்தன. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இன்று நடிகர் ரன்பீர் கபூரின் பிறந்தநாளை ஒட்டி அனிமல் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.


பூஷன் குமார் & கிரிஷன் குமாரின் டி- சீரிஸ் நிறுவனமும் முராத் கெடானியின் சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனாய் ரெட்டி வான்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.


ராஷ்மிகா மந்தனா கீதாஞ்சலி ஈனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மூலம் பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனாவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  


பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூருக்கு இப்படம் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாக்ஸிக் அப்பா - மகன் உறவைப் பேசுவதைப் போல் இந்த டீசர் அமைந்துள்ள நிலையில், “கெட்டத நோக்கி நான் போனேன், அது என் கண்ணுல படல.. என்னையே உத்து பாத்தேன்.. என்ன விட கெட்டவன் எவனுமில்ல” எனும் சந்தீப் ரெட்டி முத்திரையுடன் அமைந்துள்ள வசனங்கள் டீசரில் கவனமீர்த்துள்ளன.


 



 


சந்தீப் ரெட்டி வாங்கவின் முந்தைய தெலுங்கு படமான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று  வெற்றி படமாக அமைந்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பின்னர் இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தின் தமிழ் வர்ஷனின் நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அர்ஜுன் ரெட்டி வெற்றி படத்தை தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்க இந்தியில் இயக்கியுள்ள திரைப்படம் 'அனிமல்' திரைப்படம் என்பதால் இது மேலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பது திரை ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.