தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களான அமீர், பாலா உள்ளிட்டோரின் ஆகச்சிறந்த படைப்புகளில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் சேர்த்து தனது தாய் மண்ணான மதுரை மாநகரை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் ஒரு பெஞ்ச்மார்க்  செட் செய்த சசிகுமார் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


 



2008ம் ஆண்டு தனது முதல் படமான 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் மூலம்  ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த வைத்தவர். அப்படியே மதுரை மாவட்டத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி அதில் காதல், நட்பு, செண்டிமெண்ட், அரசியல், வன்மம், துரோகம் என அனைத்து பிரிவுகளையும் ஒன்று சேர ஒரே படத்தில் பதைபதைக்கும் காட்சிகளோடு கதைக்களத்தை அமைத்து வெற்றி கண்டவர். கதாநாயகனின் நண்பனாக நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் வெயிட்டேஜ் அதிகம் கொண்ட கேரக்டரில் நடித்ததன் மூலம் ஒரு நடிகராகவும் கவனம் பெற்றார்.
 


வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு மதுரை மண்ணை கதைக்களமாகக் கொண்ட ஏராளமான படங்கள் வருவதற்கு காரணமாக அமைந்தது. தமிழ் சினிமா கண்ட மிக சிறந்த படங்களின் வரிசையில் நிச்சயம் சுப்ரமணியபுரம் இருக்கும். நம்பிக்கைக்குரிய ஒரு இயக்குநரான சசிகுமார் அடுத்ததாக தயாரிப்பாளராக களம் இறங்கினார். தனது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பாண்டிராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற 'பசங்க' படத்தை தயாரித்து அதிலும் வெற்றி வாகை சூடினார்.


 



சமுத்திரக்கனி இயக்கத்தில் நட்பின் உன்னதத்தை போற்றும் ஒரு படமான 'நாடோடிகள்' படம் மூலம் ஹீரோவாக நடித்திருந்தார். மிகவும் கலகலப்பாக அதே சமயத்தில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்த்தப்பட்ட அப்படம் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு திறமையான நடிராக இப்படம் மூலம் நிலை நிறுத்திக் கொண்டார்.


அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டி புலி, போராளி, பிரம்மன், தாரை தப்பட்டை,  வெற்றிவேல், கிடாரி, அப்பா, பலே வெள்ளையத்தேவா, அசுரவதம், உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் என ஏராளமான படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் பல வெரைட்டியான கதாபாத்திரங்களில் முதிர்ச்சியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.  


 



2013ம் ஆண்டு இயக்குநர் பாலு மகேந்திராவின் கடைசி படமான தலைமுறைகள் என்ற தரமான படத்தை தயாரித்திருந்தார் சசிகுமார். இடையில் நடிகர் ரஜினிகாந்த் நண்பனாக 'பேட்ட' படத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் கெஸ்ட் அப்பியரென்சிலும் நடித்திருந்தார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு சசிகுமார் நடிப்பில் அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்ற படம் அயோத்தி. சசிகுமாருக்கு நல்ல ஒரு கம் பேக் படமாக அமைந்த இப்படம் சுப்ரமணியபுரம், நாடோடிகள் வரிசையில் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு படமாக அமைந்தது.


ஒரு நடிகராக சசிகுமாரை ரசிக்கும் அவரின் ரசிகர்கள் மீண்டும் அவரை இயக்குநராகவும் தயாரிப்பாளராகும் களம் இறங்கி கலக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கிறது.